இந்திய சந்தையில் நுழைந்துள்ள கீவே மோட்டார் (Keeway) நிறுவனம், இரண்டு ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என மூன்று தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை K-Light 250V க்ரூஸர் மோட்டார் சைக்கிள், Vieste 300 மேக்ஸி ஸ்கூட்டர் மற்றும் Sixties 300i ஸ்கூட்டர் ஆகும்.
பிராண்ட் கீவே ஹங்கேரியை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சீனாவைச் சேர்ந்த கியான்ஜியாங் (QJ) குழுமத்திற்கு சொந்தமானது. இது இத்தாலியின் பெனெல்லியின் தாய் நிறுவனமாகும். கீவே நிறுவனத்தில் 125சிசி முதல் 1,200சிசி வரையிலான ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஏடிவிகள் உள்ளிட்ட அதன் தயாரிப்பு வரிசையுடன், 98 நாடுகளில் இந்நிறுவனம் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
K-Light 250V பைக்
Keeway K-லைட் 250V பைக்கின் தோற்ற அமைப்பினை பொருத்தவரை க்ரூஸர் ரக மாடல்களை போல அமைந்திருக்கின்றது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வட்ட ஹெட்லைட், ரைடருக்கான ஒரு விளிம்பு இருக்கை, இரட்டை புகைப்போக்கி குழாய்கள் மற்றும் ஒரு ஸ்விங்கார்மில் பொருத்தப்பட்ட மட் கார்டு மற்றும் நம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை உள்ளன.
K-Light 250V ஆனது 250cc க்ரூஸர் பிரிவில் ஒரு தனித்துவமாக விளங்குகிறது. ஏனெனில் V-ட்வின் இன்ஜின் மற்றும் பெல்ட் டிரைவ் சிஸ்டத்தைப் பெற்ற முதல் மோட்டார்சைக்கிள் ஆகும்.
V-ட்வின் இன்ஜின் 18.7hp பவர், 19Nm டார்க் வெளிப்படுத்தும் 249cc, ஏர்-கூல்டு, 4-வால்வு யூனிட் ஆகும். இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பின்புற சக்கரத்திற்கு பவரை பெல்ட் டிரைவ் அமைப்பில் எடுத்துக் கொண்டு செல்லுகிறது. சஸ்பென்ஷன் அமைப்பில் முன்பக்கத்தில் USD ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.
K-Light 250V ஆனது 120/80 R16 முன்பக்க டயர் மற்றும் அலாய்களுடன் கூடிய 140/70 R16 பின்புற டயர், டூயல்-சேனல் ABS, LED ஹெட்லைட் மற்றும் டெயில்-லைட், 20-லிட்டர் எரிபொருள் டேங்குடன் முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேட் பிளாக், மேட் ப்ளூ மற்றும் மேட் டார்க் கிரே ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் க்ரூஸர் கிடைக்கிறது.
Vieste 300 மேக்ஸி ஸ்கூட்டர்
விஸ்டே 300 மேக்ஸி ஸ்கூட்டர் மாடலில் நான்கு LED ப்ரொஜெக்டர்களுடன் ஹெட்லேம்ப் யூனிட்டைக் கொண்டிருக்கிறது. இதில் விண்ட்ஸ்கிரீன், ஒரு செமி அனலாக் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், LED டெயில்-லைட் மற்றும் கீலெஸ் ஆபரேஷன் ஆகியவற்றைப் பெறுகிறது.
Vieste 300 ஸ்கூட்டரில் 278.2சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 4-வால்வ் எஞ்சின் மூலம் 6500 ஆர்பிஎம்மில் 18.7எச்பி பவரையும், 6000ஆர்பிஎம்மில் 22என்எம் டார்க் வெளிப்படுத்தும். பிரேக்கிங் முறையில் முன்புறம் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் இரட்டை சேனல் ஏபிஎஸ் வாயிலாக கையாளப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேக்ஸி-ஸ்கூட்டரில் 12-லிட்டர் எரிபொருள் டேங்க், 13-இன்ச் அலாய் வீல்கள் 110/70 முன் டயர் மற்றும் 130/70 பின்புற டயர் மற்றும் 147 கிலோ எடையைக் கொண்டுள்ளது.
Vieste 300 மேட் பிளாக், மேட் ப்ளூ மற்றும் மேட் ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் வழங்கப்படும்.
Sixties 300i ஸ்கூட்டர்
1960களில் விற்பனை செய்யப்பட்ட ரெட்ரோ கிளாசிக் ஸ்கூட்டர் அடிப்படையில் முன் ஏப்ரனில் கிரில், அறுகோண ஹெட்லைட், பிளவுபட் இருக்கைகள் மற்றும் ‘அறுபதுகளின்’ பேட்ஜிங்கிற்கான எழுத்துரு போன்ற ஏராளமான ரெட்ரோ ஸ்டைலிங் விருப்பங்கள் கொண்டுள்ளது.
Sixties 300i ஆனது விஸ்டே 300 போன்ற அதே 278.2cc, ஒற்றை சிலிண்டர் எஞ்சினைப் பயன்படுத்துகிறது, ஆனால் அதன் மேக்சி-ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது சிறிய 10-லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் சிறிய 12-இன்ச் சக்கரங்களைப் பெறுகிறது.
சிக்ஸ்டீஸ் 300i ஆனது LED விளக்குகள், டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் முன் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள், மல்டி-ஃபங்க்ஷன் இக்னிஷன் சுவிட்ச் மற்றும் மேட் லைட் ப்ளூ, மேட் ஒயிட் மற்றும் மேட் கிரே ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது.
மூன்று தயாரிப்புகளும் முழுமையாக நாக்ட் டவுன் (Completely Knocked Down CKD) வழியே கொண்டு வரப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்படும். மே 26, 2022 முதல் டெஸ்ட் டிரைவ் தொடங்கும், மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் டெலிவரி வழங்கப்பட உள்ளது.