பெற்றோல் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலல் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளர்.
தற்போது எதிர் நோக்கப்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து பாராளுமன்றத்தில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இன்று மாலைக்குள் நாட்டில் உள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தொடர்ந்து டீசல் விநியோகம் செய்யப்படும். தற்போது பெட்ரோலுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இருப்பினும் அதனை கொள்வனவு செய்வதற்கு போதுமான அளவு டொலர்கள் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், ஏற்கனவே அந்த கப்பலில் இருந்து கொள்வனவு செய்த பெட்ரோலுக்காக 53 மில்லியன் டொலரகள் செலுத்த வேண்டியுள்ளது. மத்திய வங்கி நேற்று வழங்கிய குறிப்பிட்ட கட்டண அட்டவணையின்படி, பணம் செலுத்தப்பட்ட பின்னர் கப்பலில் உள்ள எரிபொருள் தரையிறக்கப்படும் என்று அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
டீசல் குறித்து பிரச்சனை இல்லை. பெட்ரோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம். அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் குறிப்பிட்ட அளவு பெட்ரோல் விநியோகிக்க நேரிட்டுள்ளது. அது குறித்து கவலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் இன்றும் (18) நாளையும் (19) பெட்ரோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்றும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.