“ஈழத்தமிழர் விவகாரத்தில் 'வொர்ஸ்ட் நாடகம்' ஆடுகிறது பாஜக!" – சீமான்

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதிப்போரில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் உயிரிழந்தனர். இந்த வரலாற்றுத்துயர சம்பவத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே-18ம் தேதி உலகெங்கும் வாழும் தமிழர்கள் மெழுகுவர்த்தி தீபங்கள் ஏந்தி நினைவேந்தல் நடத்துகின்றனர். அந்த வகையில் தீவிர ஈழ ஆதரவுக் கட்சியான நாம் தமிழர் கட்சியும் ஆண்டுதோறும் மே-18ம் தேதி `இன எழுச்சி பொதுக்கூட்டத்தை’ நடத்திவருகிறது. இந்த நிலையில், 13-வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு, இன்று சென்னை பூவிருந்தவல்லியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சீமான் பொதுக்கூட்டம்

கூட்டத்தில் பேசிய சீமான் ‘’இருளில் ஒளிக்கீற்று போலத் தம்பி பேரறிவாளனின் விடுதலை நம்பிக்கையைத் தருகிறது. அதைப்போலவே மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக இளைஞர்கள் மத்தியில் தமிழ்த்தேசிய சிந்தனை வளர்ந்து வருவதைப் பார்த்த பா.ஜ.க-வினர் நம்மை அப்படியே காப்பி அடிக்கிறார்கள்! நான் வேல் தூக்கினால் அவர்களும் வேல் தூக்குகிறார்கள். நான் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, அழகு முத்துக்கோன் என நமது மூதாதையர்களைப் பற்றி பேசுகிறேன், அவர்களும் இப்போது அதையே பேசுகிறார்கள். ஈழப் படுகொலைக்குச் சுவரொட்டி ஓட்டுகிறார்கள். நாளை நான் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்துவேன், அதையும் நீங்கள் செய்வீர்களா?

ஏதோ நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க-வின் பி டீம் என்று சொல்கிறார்கள். நாங்கள் செய்வதையெல்லாம் காப்பி அடித்துச் செய்துகொண்டிருக்கும் பா.ஜ.க-தான் நாம் தமிழர் கட்சியின் பி டீம்!

பா.ஜ.க-வினர் இந்து ஈழம் அமைப்பார்களாம். உண்மையில் அவர்கள் அகதி ஈழம்தான் அமைப்பாளர்கள்! முதலில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள்! ஈழம் அமைக்கும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!

அப்படி ஈழத்தமிழர்களை இந்துக்கள் என்று அவர்கள் சொல்வார்களேயானால், ஏன் இதுவரைக்கும் ஈழத்திலிருந்து அகதிகளாக இந்தியா வந்த ஒருவருக்கும் குடியுரிமை வழங்கவில்லை? 8 ஆண்டுகளாக உங்கள் ஆட்சி தானே நடைபெற்று வருகிறது!

2008-09 காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக மோடி இருந்திருந்தால் போர் நடந்திருக்கவே விட்டிருக்கமாட்டார் என்று ஒருவர் சொல்கிறார்.‌ முதலில் அந்த காலகட்டத்தில் குஜராத் பிரதமராக இருந்த மோடி, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் போரை நிறுத்தக்கோரி ஒரு வார்த்தையாவது பேசினாரா? ராஜபக்சே ஒரு இனப்படுகொலையாளன் என்பதைப்போல கோத்ரா சம்பவத்தில் மோடியும் ஒரு இனப்படுகொலையாளர் தான்!

அத்தனை முறை இலங்கை சென்ற மோடி, இலங்கைத் தமிழர்களுக்கான நீதி குறித்து ஒரு வார்த்தை பேசினாரா? அவர் நினைத்தால் ஈழம் பெற்றுத் தரலாம் ஆனால் அவர்தான் நினைக்கமாட்டாரே!

2000-ம் ஆண்டு புலிகள் ஆனையிறவு படைத்தளத்தைப் போரிட்டுக் கைப்பற்றினர். அந்த சமயத்தில் சுமார் 40,000 இலங்கை ராணுவத்தினரை வசமாகச் சுற்றி வளைத்திருந்தனர்.‌ எளிமையாக அவர்களை வெற்றி கொண்டு, யாழ்ப்பாணத்தை மீட்டு, ஈழம் முழுக்க புலிக்கொடி பறக்கவிட்டிருப்பார்கள்! ஆனால் அது நடக்காமல் போனதுக்குக் காரணம் பா.ஜ.க! அப்போது இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய்தான்! புலிகள் முன்னேறினால் இந்தியா தனது படைகளை இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாகக் களமிறக்கும் என்று எச்சரிக்கை விடுத்ததால் தான் புலிகள் பின்வாங்கினார்கள்” என்றார்.

வீடியோவை காண….

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.