மும்பை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்திய கடற்படையை வலுப்படுத்த பி-15பி மற்றும் பி17ஏ வகையை சேர்ந்த போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பி-15பி வகையை சேர்ந்த ஐஎன்எஸ் சூரத், பி17ஏ வகையை சேர்ந்த ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை மும்பை எம்டிஎல் கப்பல் கட்டுமான தளத்தில் வடிமைக்கப்பட்டு நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற விழாவில் இரு போர்க்கப்பல்களையும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படையிடம் ஒப்படைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களும் இந்தியாவின் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. போர்க்கப்பல் தயாரிப்பில் உள்நாட்டின் தேவையை மட்டுமல்ல, உலகத்தின் தேவையையும் இந்தியா பூர்த்தி செய்யும்.
உலகின் கடல் வணிகத்தில் இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் மிகவும் முக்கியமானவை. இந்த கடல் பகுதிகளில் சுதந்திரமான போக்குவரத்தை இந்திய கடற்படை உறுதி செய்கிறது. சாகர் திட்டத்தில் இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு மத்திய அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இதில் கடற்படையின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஒரு நாடு பிராந்திய, சர்வதேச வல்லரசாக உருவெடுக்க வலுவான கடற்படை அவசியம். அந்த இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் திறனை, வலிமையை உலகுக்கு பறைசாற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின், ‘‘இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்’’ கனவு விரைவில் நனவாகும். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
கடற்படை தளபதி ஹரிகுமார் மற்றும் மூத்த தளபதிகள், பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.