குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஹர்திக் படேல் விலகியிருப்பது அவர் பாஜகவில் இணைவாரோ என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஹர்திக் படேலின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள்:
எப்போதெல்லாம் தேசம் சிக்கல்களை எதிர்கொண்டதோ எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதன் தலைவர்கள் வெளிநாட்டில் இருந்தனர். ராமர் கோயில் கட்டப்பட்டதாக இருக்கட்டும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றதாக இருக்கட்டும், அல்லது ஜிஎஸ்டி அமல்படுத்தியாக இருக்கட்டும் எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருந்துள்ளது. தேசத்தின் பிரச்சினை, குஜராத்தின் பிரச்சினை அல்லது பட்டிதார் சமூகத்தின் பிரச்சினை என எதுவாக இருந்தாலும் காங்கிரஸின் ஒரே நிலைப்பாடு பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே. அதை மட்டுமே செய்கிறது. அதை செய்ததால் இன்று நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் தனது பிடியை இழந்துள்ளது. மக்களுக்கு அடிப்படையான ஒரு வளர்ச்சித் திட்டத்தைக் கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை.
மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் நான் மாநிலத்தின் பிரச்சினைகளுடன் சென்றால் அவர்களோ எப்போதும் மொபைல் போனில் பரபரப்பாக இருக்கிறார்கள். இன்னும் சிலர், டெல்லியில் இருந்து வரும் தலைவர்களுக்கு குறித்த நேரத்தில் சிக்கன் சேண்ட்விச் கிடைக்கிறதா என்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.
இவைதான் ஹர்திக் படேல் அடுக்கியுள்ள குற்றச்சாட்டுகள். காங்கிரஸ் கட்சியும், மூத்த தலைவர்களும் எந்த ஒரு பிரச்சினையையுமே அதன் வீச்சை உணர்ந்து அணுகுவதில்லை என்பதே அவரின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் ஹர்திக் படேல் பாஜகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2017ல் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அதில் 13 பேர் இப்போது பாஜகவுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் இனி வரும் காலங்களில் இன்னும் பலரும் கட்சி மாறலாம் என்றும் கூறப்படுகிறது.