சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுத் தேடியை அறிவித்துள்ளது படக்குழு.
தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘தி லெஜெண்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாவதோடு தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார் சரவணன். நாயகியாக பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார்.
யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்துள்ளார். ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் உள்ளிட்டோர் நடனம் அமைக்க கனல் அரசு ஃபைட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டரும் ‘மொசலோ மொசலு’ முதல் பாடலும் வெளியானது. இப்பாடலை, தமிழ், தெலுங்கின் லெஜெண்ட் இயக்குநர்களாகப் பார்க்கப்படும் மணிரத்னம், ராஜமெளலி, இயக்குநர் சுகுமார் ஆகியோர் வெளியிட்டு ஆச்சர்யமூட்டினர்.
இந்த நிலையில், ‘வாடிவாசல்’ என்று தொடங்கும் இப்டத்தின் இரண்டாவது பாடல் வரும் மே 20 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் ட்விட்டரில் வாடிவாசல் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனதால் கன்ஃபியூஸ் ஆன சூர்யா ரசிகர்களும் இதே ஹேஷ்டேக்கில் விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.