ரஷ்ய தாக்குதலுக்குள்ளான உக்ரேனில், மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் இருந்து வெளியேறிய நிறைமாத கர்ப்பிணியான மரியானா ஷெமிர்ஸ்கியின் புகைப்படம் வைரலானது. அப்படம், உக்ரைனில் நடந்த போரின் கொடூரங்களை உலகுக்குச் சொன்ன மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது; போரின் துயரங்களை சொல்லும் சாட்சியானது. ஆனால், ‘அது பொய்யான புகைப்படம்’ என்று ரஷ்யா மரியானா மீது குற்றம் சாட்டியது. இப்போது அந்தப் புகைப்படம் குறித்து பேசியுள்ளார், மரியானா.
உக்ரைன், மரியுபோலில் ரஷ்ய விமானத் தாக்குதலுக்குப் பிறகு, கர்ப்பிணியான மரியானா நெற்றியில் ரத்தத்தோடு, போர்வை ஒன்றை போர்த்திக்கொண்டு, கையில் பையோடு தவிப்புடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் புகைப்படம், சமூக ஊடகத்தில் பரவியது. அதைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆனால்,ரஷ்ய தூதரகம் அந்தப் புகைப்படம் பொய்யானது என்றது. ‘மரியான அழகு சாதனப் பொருள்களை விற்க தனது இன்ஸ்டா பக்கத்தை உபயோகித்து வருபவர். இந்தப் புகைப்படம் பொய்யானது. நடிப்புக் காட்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இது’ என ரஷ்ய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. போர் உக்கிரமாக இருந்த அந்த நாள்களில், இணைய வசதி எதுவும் இல்லாததால், தன் புகைப்படம் வைரலானது குறித்தோ, அதற்கு ரஷ்யாவின் அவதூறு குறித்தோ மரியானா எதுவுமே அறியவில்லை. இதற்கிடையில், அவரது இன்ஸ்டா அக்கவுன்ட்டில், அவருக்கு வெறுப்பு மற்றும் அச்சுறுத்தும் மெசேஜ்கள் வந்து குவிந்தன. சில நாள்கள் கழித்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர் தன் இன்ஸ்டா அக்கவுன்ட்டை இயக்கியபோது, ஹேட் மெசேஜ்கள் நிரம்பி வழிந்தன.
இப்போது, இது குறித்தெல்லாம் பிபிசி ஊடகத்திடம் பேசியுள்ள மரியானா, ‘அந்த அவதூறு என்னை மிகவும் புண்படுத்தியது. உண்மையில், அந்தப் போர் சூழலில் நான் பார்த்த காட்சிகள், அனுபவித்த துயரங்கள் பல. ஆனால், இது பொய்யான புகைப்படம் என்ற அவதூறு, வெறுப்பு உமிழப்பட்டிருக்கிறது. என் புகைப்படங்களை வெளியிட்ட பத்திரிகையாளர்கள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்தத் தாக்குதல் உண்மையாகவே நடந்தது என்பதை உறுதிப்படுத்த, மற்ற கர்ப்பிணிப் பெண்களையும் பேட்டி கண்டிருக்க வேண்டும். ஆனால், தாக்குதலின்போது, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பெண்களில் கடைசியாக வெளியேறியது நானாகத்தான் இருந்திருப்பேன்” எனத் தெரிவித்துள்ள மரியானா, ரஷ்ய தூதரகத்தின் மீது குற்றம் எதுவும் சொல்லாமல், பத்திரிகையாளர்கள் மீது விமர்சனம் வைத்துள்ளார்.