கொல்கத்தாவின் மேதினிபூர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பொருள்களின் விலையை உயர்த்தி சாமான்யர்களைச் சூறையாடி மத்திய அரசு செழித்து வருகிறது.
எரிவாயு மற்றும் இதர பொருள்களின் விலையை உயர்த்துவதன் மூலம், மத்திய ஆட்சியில் உள்ள கட்சி லாபத்திலிருந்து பங்கு பெறுகிறது. எப்போதெல்லாம் எரிவாயு, எரிபொருளின் விலை உயர்கிறதோ அப்போதெல்லாம் மத்திய அரசு வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றங்களை உருவாக்குகிறது.
ஒவ்வொரு முறையும் மக்கள் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிடும்போது, மோடி அரசு மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வகுப்புவாதக் கலவரங்களை உருவாக்க முயல்கிறது. இது முக்கிய பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் ஒரு பிரிவினையை தந்திரமாகச் செயல்படுத்துகிறது.
உள்நாட்டு எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி சாமான்ய மக்களை மத்திய அரசு சூறையாடுகிறது. மார்ச் 2022 -ல், மத்திய அரசு வீட்டுச் சமையல் எரிவாயுவின் (எல்பிஜி) விலையை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தி ரூ.949.50 ஆக அறிவித்தது. ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 15.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
ஆனால் அதே நேரம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, டெல்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களின்போது வகுப்புவாத மோதல்களை எதிர்கொண்டன.
மத்திய அரசு மாநிலங்களிலிருந்து திரட்டும் பணத்தில் ஒரு பங்கைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு எங்களின் நியாயமான நிலுவைத் தொகையைக் கூட எங்களுக்கு வழங்கவில்லை” எனப் பேசினார்.