பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘மாநிலத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதால் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்படும்’ என கடந்த ஆண்டு அறிவித்தார்.
இதையடுத்து கடந்த டிசம்பரில் மதமாற்ற தடை சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்ட மேலவையில் இந்த மசோதாவை விட மாட்டோம் என காங்கிரஸார் தெரிவித்தனர். இதனால் பாஜகவினர் மேலவையில் பெரும்பான்மை இல்லாததால் அங்கு இந்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை. மாறாக அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று அவசரச் சட்டமாக கொண்டுவர ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ‘கர்நாடக மத சுதந்திர உரிமை சட்ட மசோதா 2021’ என்ற பெயரிலான மதமாற்ற தடை சட்டத்துக்கு நேற்று மாலையில் ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டத்தின்படி மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.