த. வளவன்
நெல்லை அருகே கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தால் பதட்டத்தில் இருக்கிறது நெல்லை மாவட்டம். ராட்சத பாறைகள் 400 அடி உயரத்தில் இருந்து குவாரியில் அடித்தளத்தில் விழும் சத்தம் இன்னமும் கேட்கிறது. சுமார் 50 ஆயிரம் டன் அளவுக்கு பாறைகள் விழுந்ததால் அதன் இடிபாடுகளில் 6 பேர் சிக்கிய சம்பவம் மாவட்டத்தில் திகிலைக் கிளப்பியுள்ளது. இதில் இருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மூவர் தமது இன்னுயிரை இழந்துள்ளனர். இன்னும் ஒருவர் கதி என்ன ஆயிற்று என்பது இதுவரை தெரியவில்லை. தாம் வேலை பார்த்த கல்குவாரியே தமக்கு கல்லறையாக மாறும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் இவர்கள்.
நெல்லை மாவட்டம், பொன்னாக்குடி கிராமத்தின் பின் பக்கம் அமைந்திருப்பது அடைமிதிப்பான் குளம் கிராமம். கல்குவாரியின் பாறைகளை வெடி வைத்து தகர்த்து அதனை கிரஸ்ஸர் மூலம் பல சைசில் ஜல்லிக் கற்களாக தயார் செய்கின்றனர். அத்துடன் எம் சாண்ட் தயாரிக்கவும் இந்த பாறைத்துகள்கள் பயன்படுவதால் இங்கு இரவு பகல் என்று பாராமல் பணிகள் நடப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 14/05/2022 அன்று வழக்கம் போல இரவு நேரம் விதிகளை மீறி பாறைகளைப் பிளப்பதற்கு கல்குவாரியில் அடிப்புறத்தில் பல இடங்களில் துளையிட்டு வெடி வைத்து தகர்த்திருக்கிறார்கள். வெடியின் தாக்கம் பாறையின் 400 அடி உயரமுள்ள உச்சிப்பகுதி வரை ஊடுருவி இருக்கிறது. வெடிவைத்த பின்பு இரவு சுமார் 12 மணியளவில் சிதறிய பாறைகளின் கற்களை அள்ளி லாரிகளில் ஏற்றும் பணியில் மூன்று பெரிய ஹிட்டாச்சிகள் மற்றும் அதனைக் கொண்டு செல்வதற்காக மூன்று லாரிகளும் அடித்தளத்தில் இருந்திருக்கின்றன.
இந்த நேரத்தில் 400 அடி உயரத்தில் இருந்து பெரிய பாறை திடீரென்று சரிந்து கீழே பணியிலிருந்த ஹிட்டாச்சிகள் மற்றும் லாரிகள் மீது விழுந்து அமுக்கியிருக்கிறது. தொடர்ந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் மூன்று ஹிட்டாச்சிகளின் 3 ஆபரேட்டர்கள், மூன்று லாரி டிரைவர்கள் என 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த உடன் இரவு 12.30 மணியளவில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, டி ஐ ஜி பிரவேஷ்குமார், எஸ்.பி. சரவணன், முன்னீர்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி இருக்கின்றனர். தீயணைப்பு மீட்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்த முருகன், விஜய் என்ற இருவரை மீட்டனர். ஒருவர் மீட்கப் பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். மற்றவர்களை மீட்பதற்கு விழுந்த பாறைகள் தடையாக இருப்பதால் அதை அப்புறப்படுத்த தூத்துக்குடியிலிருந்து ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. உயரத்தில் இருந்து பாறைகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருப்பதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டு தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறங்கினர். அவர்களும் ஒருவரை இறந்த நிலையில் மீட்டனர். இன்னொருவர் 17ம் தேதி பிணமாக மீட்கப் பட்டார். இன்னும் ஒருவரை இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்ற்றனர் தேசிய பேரிடர் மீட்பு படையினர். இதனால் நெல்லை கிராமங்களில் சோகம் சூழ்ந்துள்ளது.
என்ன நடந்தது அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில்? விசாரிக்க ஆரம்பித்தோம்.
அடைமிதிப்பான்குளம் கல்குவாரி சங்கரநாராயணன், செபாஸ்டியன், செல்வராஜ் மற்றும் குமார் என்பவர்கள் பொறுப்பில் இயங்கி வருகிறது. கனிமவள இயக்குனராக விதிப்படி இவர்கள் 15 மீட்டர் வரை மட்டுமே பாறைகளை குடைந்து பயன்படுத்த முடியும். ஆனால் கனிமவளத்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு பத்து மடங்குக்கும் ஆழமாக தோண்டியதன் விளைவே இந்த விபத்து என்கின்றனர், விபரம் தெரிந்தவர்கள்.
கனிம வளத்தை பொறுத்தவரை மணல் குவாரியோ, கல்குவாரியோ எதுவாக இருந்தாலும் பணம் கொழிப்பதால் அங்கு விதிமீறல்கள் தாராளமாக நடக்கின்றன. இதற்கு அரசு துறையினரும் அலட்சியமாக பணம் வாங்கிக்கொண்டு உடன்படுவது தான் முதற்காரணம். குவாரிகளைப் பொறுத்தவரை கனிம வளத்துறையின் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறுபவரே குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணியைச் செய்ய வேண்டும். குவாரியின் எல்லையை காட்ட மஞ்சள் கற்களை ஊன்றி இருக்க வேண்டும். குவாரி அருகில் 7.5 மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். குவாரி அருகில் இருந்து 10 மீட்டருக்குள் நீராதாரங்கள், வழித்தட பாதைகள் இருக்கக் கூடாது. 50 மீட்டர் தொலைவுக்குள் உயர், குறைந்த அழுத்த மின் பாதை இருக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 50 மீட்டருக்குள் இருக்க கூடாது. குவாரி கற்கள் வெட்டப்படும்போது தூசு கிளம்பும் என்பதால், மாசு கட்டுப்பாடு ஏற்பாடாக அருகில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்.
குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்களின் கழிவுகளை, குத்தகை இடத்திற்கு உள்ளே போட்டு வைத்திருக்க வேண்டும். பின் அவற்றை அரசே ஏலமிடும். குவாரி குறித்து முன்கூட்டியே “மைனிங் பிளான்’ என்ற ஒன்றை உரிமையாளர் வழங்கி, “அப்ரூவல்’ பெற வேண்டும்.அதனடிப்படையில் குவாரி இயங்க வேண்டும். மைனிங் பிளானில், குவாரி அமைவிடம், பாதுகாப்பு, அதில் வெட்டி எடுக்கப்படஉள்ள கற்களின் அளவு, வெட்டிய கற்களை எடுத்துச் செல்லும் முறை உட்பட குவாரியின் அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்கும்.
அத்துடன் கனிமவள இயக்குனராக விதிப்படி, ஒவ்வொரு 15 மீட்டர் ஆழத்திற்கும் ரேம்ப் போன்ற பாதை அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும் பட்சத்தில் திடீரென்று விழுகிற பாறைகள் அதன் மேல் விழுந்து விடும். தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். தொழிலாளர்களும் தப்பித்து விடுவார்கள். ஆனால் அப்படி அமைக்கப்படாமல் விதியை மீறி 400 அடிக்கும் கீழே போயிருக்கிறார்கள். இதற்கு யார் அனுமதித்தார்கள். மேலும் தற்போது கனிமவளத்துறையினர் துறையினர் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டிய காலமிது. அவர்கள் முறைப்படி ஆய்வு செய்திருந்தால் இத்தனை பெரிய விபத்து ஏற்பட்டு இருக்காது என்கிறார்கள் ஏரியாவாசிகள்.
சம்பவம் நடந்ததும் களத்துக்கு வந்த ராதாபுரம் தொகுதி முன்னாள் அதிமுக எம் எல் ஏ இன்பதுரை பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னதுடன் குவாரியில் அரசின் விதிகள் மீறப்பட்டுள்ளதை சாடினார். கல்குவாரி உரிமையாளர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சட்டத்துக்குப் புறம்பாக இதுபோல தவறு செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அதைக் கண்காணித்து தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அதனால் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரியை கண்காணிக்க வேண்டிய கனிம வளத்துறை அதிகாரிகள் எங்கே? இந்த குவாரிக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த கல்குவாரிக்கு கால நீட்டிப்பு கொடுத்தது எப்போது? இதையெல்லாம் மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை, மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையம், விஜயநாராயணம் கடற்படை தளம் என முக்கியமான இடங்களில் இது போல விபத்து ஏதாவது ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை குழு இப்படித்தான் கால தாமதமாக வருவார்களா? இது இந்த மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவரை ஒரு அமைச்சர் கூட இந்தப் பகுதியை வந்து பார்க்கவில்லை. முதல்வர் இங்கு உடனே வர வேண்டும். அவர் வந்தால்தான் மீட்புப் பணிகள் வேகமாக நடக்கும் நெல்லை மாவட்டத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க இங்குள்ள அனைத்துக் குவாரிகளையும் மூட வேண்டும். குவாரிகள் அனைத்தும் முறையாக நடைபெறுகிறது என்பதை நீதிபதி தலைமையில் குழு அமைத்து உறுதி செய்த பின்னர் குவாரிகள் செயல்பட அனுமதிக்கலாம். எதற்கெல்லாமோ குழு அமைக்கும் இந்த அரசு இதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும். கூடங்குளத்தில் அனுமதி பெறாத இடத்திலேயே ஒரு கல்குவாரி செயல்படுகிறது. அது பற்றி மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தார்கள். அது குறித்து நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அதனால் அனைத்து குவாரிகளையும் மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம். விபத்தில் சிக்கியவர்களை மீட்க, பேரிடர் மீட்புக் குழுவினரை விரைவாக வான்வெளியில் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எகிற அடுத்தடுத்து திருப்பங்கள்.
ராதாபுரம் திமுக எம்எல்ஏவும் சபாநாயகருமான அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், கனிமவள இயக்குனர் நிர்மல் குமார் என அனைவருமே ஸ்பாட்டுக்கு வந்து பாதிக்கப் பட்ட மக்களிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் தந்தனர். ஆனாலும் சமாதானமடையாத மக்கள் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் நடந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்த குவாரியை நடத்துபவர்கள் திமுக விஐபிக்களின் பினாமிகள் என்று சொல்லப்படுவது தான். இதை திமுகவினரே வெளிப்படுத்தி வருவது தான் வித்தியாசமான விஷயம். கல் குவாரியை பார்வையிட்ட நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் முறைகேடுகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருப்பது அவரது கட்சியிலேயே இருக்கும் ஒரு வி ஐ பியை தான் என்கின்றனர் திமுகவினர்.
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் சொல்லி வரும் நிலையில் தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் சம்பவ இடத்தை பார்வையிட்டு இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நாங்குநேரி ஏ.எஸ்.பி ராஜாத ஆர் திரிவேதியை நியமித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். குற்றவாளிகள் தலைமறைவாக உள்ள நிலையில் விசாரணையை துரிதப்படுத்த நெல்லை மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என்பதால் பதட்டத்தில் இருக்கின்றனர் கனிம வளத்துறை அதிகாரிகள். குற்றவாளிகள் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்களது வாக்குமூலம் தமது அரசியல் இமேஜை உடைத்து விடலாம் என்பதால் ஆளுங்கட்சி வட்டாரத்திலும் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் தான் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் தரப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சமாதானப்படுத்தி இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“