புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், 30 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “இன்று நாட்டிற்கு சோகமான நாள். இந்த துக்கம் மற்றும் கோபமானது காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டுமல்லாமல், தீவிரவாதம் மற்றும் இந்தியாவின் இறையாண்மை , ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் சக்திகளுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது.
தீவிரவாதி என்பவர் தீவிரவாதிகளில் ஒருவராகவே கருதப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவினால் நாங்கள் ஆழ்ந்த வேதனை மற்றும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இது ராஜீவ் காந்தியை பற்றிய கேள்வி அல்ல, கொலை செய்யப்பட்ட ஒரு பிரதமரை பற்றிய கேள்வி. தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் அனைவரின் மனங்களும் புண்படுத்தப்பட்டுள்ளன.
ராஜீவ் காந்தி நாட்டிற்காக உயிரைக் கொடுத்துள்ளாரே தவிர, காங்கிரசுக்காக அல்ல. ஆனால், மலிவான அரசியல் லாபத்துக்காக கொலையாளிகளை விடுதலை செய்யும் சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது. இப்போது எந்த மாதிரியான அரசுகள் ஆட்சியில் உள்ளன, தீவிரவாதத்தின் மீதான அவர்களின் அணுகுமுறை என்ன என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும்” என்றார்.