புதுடெல்லி: சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்கில், தாம் அமர்த்திய களஆய்வின் ஆணையர் அஜய் குமார் மிஸ்ராவை வாரணாசி சிவில் நீதிமன்றம் அகற்றி உத்தரவிட்டது. கியான்வாபியில் சிவலிங்கத்தை சுற்றியுள்ள ஒசுகானா சுவரை இடிக்கும் மனு மீது மே 19-ல் முடிவு எடுக்கப்பட உள்ளது.
வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தரிசிக்கும் வழக்கில், ஆணையராக மூத்த வழக்கறிஞரான அஜய் குமார் மிஸ்ராவை அமர்த்தி, நீதிமன்றக் களஆய்வு நடைபெற்றது. இதில், தொழுகைக்கு முன் கை, கால்களை கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக புகார் செய்யப்பட்டது. ஒசுகானாவை சீல் வைத்து தொழுகைக்கும் தடை விதிக்க வேண்டும் என பெண் மனுதாரர்களின் வழக்கறிஞரான ஹரி சங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இப்புகாரை மறுத்த மசூதி நிர்வாகத்தினர் அது கல்லாலான நீரூற்று எனக் கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இம்மனு மீது நீதிபதிரவி குமார் திவாகர், மசூதியின் ஒரு பகுதியிலுள்ள ஒசுகானாவை சீல் வைத்து, மத்திய பாதுகாப்பு போலீஸாரை அமர்த்த உத்தரவிட்டார். மசூதியினுள் 20 பேர் மட்டும் தொழுகை நடத்தக் கோரியதையும் நீதிமன்றம் ஏற்றிருந்தது.
இந்நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் ஆஜரான மசூதி தரப்பின் வழக்கறிஞர் அபய் நாத் யாதவ் கூறும்போது, ‘நீதிமன்ற தடையை மீறி கள ஆய்வின் முடிவுகளை ஆணையரே வெளியிட்டார். இவ்வாறு பொறுப்பில்லாமல் இருப்பவர் வழக்கில் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். எனவே அவரை நீக்கி உத்தர விடவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்ற நீதிபதி ரவிகுமார், அஜய் மிஸ்ராவை நீக்கியதுடன் கள ஆய்வின் அறிக்கையை மற்ற இரண்டு உதவி ஆணையர்களில் ஒருவரான விஷால் சிங்கை சமர்ப்பிக்க வேண்டி உத்தரவிட்டார். இதையடுத்து, விஷால் சிங் கேட்டபடி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 2 தினங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மற்றொரு உதவி ஆணையரான அஜய் பிரதாப் சிங் உதவியாக இருக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
ஒசுகானாவின் தடுப்பு சுவர்களை இடித்து நடுவிலுள்ள சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஒசுகானாவின் நடுவிலுள்ள சிவலிங்கத்தை அளப்பதற்கும் அப்பெண் மனுதாரர்களின் வழக்கறிஞரான ஹரிசங்கர் ஜெயின் அனுமதி கோரியிருந்தார்.
இதன் மீது மசூதி தரப்பின் ஆட்சேபத்தையும் பெற்று மே 19-ல் விசாரிப்பதாகவும் கூறி நீதிபதி ரவிகுமார் வழக்கை ஒத்திவைத்தார்.
தொழுகைக்கு இடையூறு கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிங்காரக் கவுரி வழக்கின் களஆய்விற்கு தடை கேட்டு மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு உடனடியாகத் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம் அம்மனுவை நேற்று விசாரணை செய்தது.
அப்போது, ‘சிவலிங்கம் காணப்பட்ட இடம் எது?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு உ.பி. அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மெஹ்தா, ‘நாம் இன்னும் அறிக்கையை பார்க்கவில்லை. சிவலிங்கம் காணப்பட்ட இடம் தான் சீல் வைக்கப்பட்டுள்ளது. தொழுகை நடத்த வருபவர் அதற்கு முன் ஒசுகானாவில் ஒசு செய்யும்போது கால்கள் படும் ஆபத்து உள்ளது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகி விடும். விவரமான அறிக்கையை படிக்க ஒருநாள் கால அவகாசம் தேவை’ எனப் பதிலளித்தார்.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஒசுகானாவின் அருகில் எவரும் செல்லாத வகையில் சீல் தொடர வாரணாசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதேசமயம், மசூதியில் தொழுகை நடத்த வருபவர்களுக்கு எந்த தடையும் இன்றி, வழக்கம்போல் தொடர வேண்டும் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து, வழக்கை வெள்ளிகிழமைக்கு ஒத்திவைத்தனர்.