புதுடெல்லி: குதுப்மினார் வளாகத்தில் மீண்டும் இந்து மற்றும் ஜெயின் கோயில்களை அமைக்க உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு டெல்லி சாகேத் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
டெல்லியில் குதுப்மினார் வளாகத்தில் 27 இந்து மற்றும் ஜெயின் கோயில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி கட்டப்பட்டதாகவும் இது தொடர்பாக தொல்லியல் துறை கூறியிருப்பதை ஆதாரமாகக் கொண்டும் டெல்லி சிவில் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குதுப்மினார் வளாகத்தில் இடிக்கப்பட்ட 27 இந்து, ஜெயின் கோயில்களை மீண்டும் நிர்மானிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. மேலும் அறக்கட்டளை சட்டம் 1882-ன் படி, ஒரு அறக்கட்டளையை நிறுவி குதுப்மினாருக்கு உள்ளே அமைந்துள்ள கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை அந்த அறக்கட்டளையிடம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி சாகேத் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் வரும் 24-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.