கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன், மாதவன் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா உலகப்புகழ் பெற்றது. இந்தாண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று (மே 17) கோலாகலமாக தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், தமிழ், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இவ்விழாவில், இந்தியா சார்பில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழாவில், ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன், மாதவன் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஏஆர் ரஹ்மான் கூறுகையில், “இங்கே வந்திருப்பது ஒரு பெரிய கவுரவம். நான் இயக்கிய முதல் படமான ‘லி மஸ்க்’ இவ்விழாவில் திரையிடப்படுகிறது. நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம்” என்றார்.
36 நிமிடங்களே ஓடக்கூடிய ‘லி மஸ்க்’ திரைப்படம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் தன் வாழ்நாளில் சந்தித்த பல ஆண்களை, அவர்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேன்ஸ் திரையிடப்பட விழாவில் மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. அதே போல கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரைலரும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்: “என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு