திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள சிதம்பரம் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தம்பதி அய்யப்பன்- துர்கா. இவர்கள் மகள் சாந்தினி [பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது]. 18 வயதான சாந்தினியும் கேக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞரும் ஒருவரை ஒருவர் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த காதல் விவகாரம் அந்தப் பெண்ணின் தந்தை அய்யப்பனுக்கு தெரியவந்ததையடுத்து, அவர் தன் மகளைக் கண்டித்துள்ளார். ஜெகனை சந்திப்பதை தவிர்க்குமாறும் எச்சரித்திருக்கிறார். தந்தையின் கண்டிப்பையும் மீறி மகள் தொடர்ந்து அந்த இளைஞரைக் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அய்யப்பன் வீட்டு வாசலில் அவர் மகள் சாந்தினியும், ஜெகனும் பேசிக்கொண்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை நேரில் பார்த்த அய்யப்பன் கடும் கோபமடைந்திருக்கிறார். அதையடுத்து தன் மகளையும், அந்த இளைஞரையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார். ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த அவர் வீட்டுக்குள் சென்று நைலான் கயிற்றைக் கொண்டுவந்து தன் மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றிருக்கிறார்.
வலி தாங்காமல் அவர் மகள் அலறி துடித்திருக்கிறார். அதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் விரைந்துவந்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் தாய் துர்கா, திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து உரிய விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சாந்தினியின் தந்தை அய்யப்பன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசும் காவல்துறையினர், “அய்யப்பனிடன் நாங்கள் நடத்திய விசாரணையில், தன் மகளின் காதல் விவகாரம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், பலமுறை கண்டித்தும்கூட தனது வீட்டு வாசலிலேயே மிகவும் துணிச்சலுடன் அந்த இளைஞருடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டுதான் ஆத்திரத்தில் கொலை செய்ய முயன்றதாகத் தெரிவித்திருக்கிறார்” என்கிறார்கள்.