முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுவித்து வந்த பேரறிவாளன் இடைவிடாத சட்டப்போராட்டத்தின் காரணமாக இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு வெளியான நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் இல்லத்தில், அவருடைய உறவினர்கள் கண்ணீர் மல்க மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன் கூறுகையில்,
நல்லவன் வாழவேண்டும் கெட்டவன் வீழவேண்டும் என்பதே இயற்கையின் நியதி. என்னுடைய 31 ஆண்டு சிறைவாழ்க்கையை தமிழக மக்களும், உலக தமிழர்கள் அனைவரும் சேர்ந்து, ஆதரத்தார்கள் அன்பு செலுத்தினார்கள். தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். இது அனைத்திற்கும் மூலக்காரணம் என் அம்மா.
என் அம்மாவின் தியாகம், அவரின் போராட்டம், ஆரம்ப காலத்தில் அதிக அவமானங்களை சந்தித்தவர் புறக்கணிப்புகளை எதிர்கொண்டவர் நிறைவே வேதனை மற்றும் வலிகளை சந்தித்துள்ளார். அதை எல்லாம் கடந்து 31 ஆண்டுகாலம் எனக்காக இடைவிடாமல் போராடியுள்ளார். எங்கள் பக்கம் இருந்த உண்மை எங்களுக்கு உறுதுனையாக இருந்தது. எங்கள் பக்கம் இருந்த நியாயம் தான் எங்களுக்கு வலிமையை கொடுத்தது.
என் அம்மா மட்டுமல்லாமல் எனக்காக எனது குடும்பத்தாரும் அதிகமான போராடினார்கள். இந்த 31 ஆண்டு கால போராட்டத்தி் ஒவ்வொரு முறை நான் வீழும்போது எனது அம்மாவின் உழைப்பை திருவிட்டதாக நினைத்து அவரை பார்க்க தயங்குவேன். அவர்கள் உயிருடன் இருக்கும்போதே நான் விடுதலை அடைந்த செய்தியை அவர்கள் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.
அனைத்து காலகட்டத்திலும் ஏதாவது ஒருவகையில பலரும் எங்களுக்காக தங்களுடைய சக்திக்கு மீறி அளவில்லாமல் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். உழைத்திருக்கிறார்கள். எங்களுக்காக துன்பப்பட்டிருக்கிறார்கள். வாழ்கையின் ஓட்டத்தில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அவர்களிடத்தில் நேரில் சென்று நன்றி கூறி விரும்புகிறேன். இந்த நீண்ட போராட்டத்தில் மிக்பெரிய திருப்புமுணை அரசின் ஆதரவு, மக்களின் பெரிய ஆதரவை உருவாக்கிய மிகப்பெரிய தருணம் எனது தங்கை செங்கொடியின் தியாகம்.
பேரறிவாளன் ஒரு நிரபராதி அவரது வாங்குமூலத்தை நான் தவறாக பதிவு செய்துவிட்டேன் என்று 2013-ல் திரு தியாகராஜன் ஐபிஎஸ் அவர்கள் வெளிப்படியாக வந்து பேட்டி கொடுக்கும்போதும், பின்னர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலமாக கொடுத்தபோதும் அது மிக்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்த கே.டி.தாமஸ் அவர்கள அவர்களின் பேட்டி அவரின் கட்டுரைகள் இவை எல்லாம் மிக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் நீதிபதி கிருஷ்ணய்யர் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளார். அவர் எனக்காக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு கடிதம் எழுதும் போது நான் உங்களிடம் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த விடுதலை என்ற விஷயத்தை சாத்தியப்படுத்துவதற்காக ஏறக்குறைய 6 ஆண்டுகள் என்னிடம் இருந்து எந்த பொருளாதார பலனையும் எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் திரு கோபால் சங்கரநாராயணன் எனக்காக வாதாடியிருக்கிறார். அதேபோல் தமிழக அரசு தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்
இப்படி நன்றி சொல்ல வேண்டிய பட்டியல் என்னிடம் நிறைய உள்ளது. ஊடக நண்பர்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. இந்த உண்மைகள் வெளிவந்திருக்காது. சிறை உள்ளிட்ட அனைத்து துறைகளுமே எங்களுக்கு உதவியாக இருந்துள்ளனர். 31 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் தான் என் மனதில் இருந்தது. இப்போதான் அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும்.
நான் கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். 31 ஆண்டுகால சட்டப்போராட்டத்தை ஒரு பேட்டியில் சொல்லிவிட முடியாது. எனது எதிர்காலம் குறித்து விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறேன். மரண தணடனை வேண்டாம் என்று சொல்பவன் நான். பல நீதியரசர்கள் கூட இதையேதான் சொல்லியிருக்கிறார்கள். என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“