2022-ம் ஆண்டிற்கான 75-வது கான் திரைப்பட விழா பிரான்ஸின் கான் நகரில் மே 17-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மே 17-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இவ்விழாவில் தமிழ் திரையுலகிலிருந்து ரஹ்மான், கமல் ஹாசன், நயன்தாரா, மாதவன், பூஜா ஹெக்டே, தமன்னா போன்ற பிரபலங்கள் சிவப்பு கம்பள வரவேற்புடன் பங்கேற்றுள்ளனர். மேலும் கமல் நடித்த `விக்ரம்’ படத்தின் முன்னோட்டம், பார்த்திபன் நடித்த `இரவின் நிழல்’, ரஹ்மானின் விருட்சுவல் ரியாலிட்டி படமான `லே மாஸ்க்’, பா.ரஞ்சித்தின் அடுத்தப் படத்திற்கான போஸ்டர் போன்றவை திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் இன்று விழா நடைபெறும் வேளையில் காணொலியில் தோன்றி பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஹிட்லரின் சர்வாதிகாரத்தைக் கேலி செய்து போரின் கொடூரங்களைத் திரைப்படம் மூலம் மக்களிடம் கொண்டுசேர்த்த சார்லி சாப்ளினின் `தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தை நினைவுகூர்ந்து “சினிமா ஊமையாக இல்லை என்பதை நிரூபிக்க புதிய சாப்ளின் தேவை” என்று பேசியுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா நடக்கும் போர் குறித்துப் பேசிய ஜெலன்ஸ்கி “ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். சினிமாவில்போல கடைசி கைதட்டலுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் எழ மாட்டார்கள்” என்று கூறிய ஜெலன்ஸ்கி “சர்வாதிகாரமும், சுதந்திரத்திற்கான போரும் மீண்டும் நடக்குமேயானால் சினிமா அமைதியாக இருக்குமா அல்லது அது பற்றிப் பேசுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் “சாப்ளினின் `தி கிரேட் டிக்டேட்டர்’ படம் உண்மையான சர்வாதிகாரியை அழிக்கவில்லை என்றாலும் அப்படத்திற்கு நன்றியைக் கூறுவேன். ஏனென்றால் சினிமா அமைதியாக இருக்கவில்லை. அதுபோல் சினிமா ஊமையாக இல்லை என்பதை நிரூபிக்க புதிய சாப்ளின் தேவை. இந்தச் சமயத்தில் சினிமா அமைதியா இருக்கப்போகிறதா அல்லது பேசப்போகிறதா?” என்று பேசியுள்ளார்.