வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவு நாடுகளான ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் – கிரெனடைன்ஸ் ஆகியவற்றுக்கு, ஏழு நாள் சுற்றுப்பயணமாக, 15ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டுச் சென்றார். ஜமைக்காவுக்கு சென்ற முதல் இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த், தலைநகர் கிங்ஸ்டனில், அந்நாட்டு பார்லிமென்ட்டின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், நேற்று (மே 17) பேசினார்.
அதன் விபரம்: இந்தியாவிலிருந்து, 15 ஆயிரம் கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள ஜமைக்காவில் நான் இருந்தாலும், இந்தியாவில் இருப்பது போன்றே உணர்கிறேன். பார்லிமென்ட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் உறுப்பினர்களாக உள்ளது பெருமையாக உள்ளது. இந்தியாவில் கல்வித்துறை மிக தரமாக, சிறப்பாக உள்ளது. இங்குள்ள ஐ.ஐ.டி.,க்களில் படித்த பலர், சர்வதேச அளவில் பெரும் தொழில் நிறுவனங்களிலோ, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலோ தலைமை நிர்வாகிகளாக உள்ளனர்.
எங்கள் புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, வெளிநாடுகளில் ஐ.ஐ.டி.,க்கள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை துவக்க விருப்பம் தெரிவித்துள்ள நாடுகளில், ஜமைக்காவும் ஒன்று என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் முதன்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களுக்காக, சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. இதை ஜமைக்கா மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மேற்கத்திய நாடுகளின் கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட, இந்தியாவில் மிக மிக குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.