தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக் கோட்டையில் சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இப்பள்ளிக்கு வழங்கி தனியார் பள்ளிக்கு இணையாக இந்த அரசு பள்ளியை தரம் உயர்த்தி உள்ளனர்.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக அரசு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற இப்பள்ளியை கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியாக தேர்வு செய்து இப்பள்ளிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 25க்கும் மேற்பட்ட கணினி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வழங்கி சாதாரண வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றி தரம் உயர்த்தியது.
பள்ளியின் பழைய மாணவர்கள் தங்கள் பங்கிற்கு லட்சங்களை அள்ளிக் கொடுத்தனர். பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா, ஸ்மார்ட் வகுப்பறைகள், முற்றிலும் குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகம், உடற்கல்வி பொருட்கள், நவீன கழிவறைகள், மேசை, நாற்காலி உள்ளிட்ட 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு வசதிகளை தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் தரத்தில் பழைய மாணவர்கள் மூலம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இந்த அரசு பள்ளியில், LKG முதல் 5-ம் வகுப்பு வரை முற்றிலும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கபடுவதால், ஆங்கில கல்விக்காக நகரப்பகுதி பள்ளிகளை தேடிச்செல்லாமல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராமத்து மாணவர்கள் இந்த அரசு பள்ளியிலேயே ஆங்கில வழி கல்வி கற்கும் வசதியை பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இப்பள்ளி வளாகத்தில் “மாணவர் மனசு” என்ற பெயரில் பெட்டி ஒன்று உள்ளது. இதில் இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தங்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் கோரிக்கைகளை “மாணவர் மனசு” என்ற தலைப்பில் எழுதி இதில் போட்டால் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் கிளாஸ், ஏசி வகுப்பறை, கணினி ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளோடு காணப்படும் தனியார் பள்ளிகள் நிர்வாகத்திற்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான கொம்மடிகோட்டை கிராமத்தில் தனியார் பள்ளிகளுக்கே டஃப் கொடுத்துவரும் சந்தோச நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியை, சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.