சென்னை: “அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதனை தமிழக முதல்வர் சரியாக செய்திருக்கிறார். அதனால்தான் இன்று இந்த முடிவு கிடைத்துள்ளது. அதனால் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன்” என்று பேரறிவாளன் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முதல்வரை சந்தித்த பின்னர் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேரறிவாளன் கூறியது: “தமிழக முதல்வருடனான சந்திப்பு மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதனை தமிழக முதல்வர் சரியாக செய்திருக்கிறார். அதனால்தான் இன்று இந்த முடிவு கிடைத்துள்ளது. அதனால் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன்.
என்னுடன் வந்திருந்த குடும்பம் குறித்த விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். முதல்வர் என்னை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். ஒரு நீண்ட நெடிய போராட்டம். அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த விடுதலை கிடைத்துள்ளது.” என்று பேரறிவாளன் கூறினார்.
அற்புதம் அம்மாள் கூறியது: “பேரறிவாளனுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு தமிழக அரசு கொடுத்த பரோலும், அடுத்ததாக கிடைத்த ஜாமீனும் ரொம்ப உதவியாக இருந்தது. அதனால் முதல்வருக்கு நன்றி சொல்வதற்காக வந்தோம். முதல்முறை பரோல் கிடைத்தபோது தலைமைச் செயலகத்துக்கு வந்து முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
அப்போது முதல்வரிடம், 31 ஆண்டு காலம் சிறையில் பேரறிவாளன் கழித்துவிட்டான், அவன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வரிடம் அப்போது கேட்டுக்கொண்டேன். அப்போது முதல்வர், உங்க உள்ளத்தில் என்ன ஓடுகிறதோ, அதே உணர்வுதான் எனக்கும் ஓடுகிறது. என்னால் என்ன செய்ய முடியுமோ, நான் அதை செய்கிறேன் என்று அவர் கூறினார். முடிவுக்காக காத்திருந்தோம், தீர்ப்பு தெரிந்தவுடனே அவருக்கு நன்றி கூறினோம். முதல்வர் இயல்பாக பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், அதுதான் எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது“ என்று அவர் கூறினார்.