குஜராத்தில் திருமணப் பரிசாக வந்த பொம்மையை ரீசார்ஜ் செய்ய முயன்றபோது அது வெடித்து சிதறியதில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர் படுகாயமடைந்தனர்.
குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தில் லதேஷ் காவித் என்பவர், அதே மாவட்டம் வான்ஸ்தா தாலுகாவில் உள்ள கங்காபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் தங்கள் திருமணத்தில் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பரிசுகளைப் பெற்றனர்.
நேற்று காலை, லதேஷ் மற்றும் மணமகளின் உறவினர் ஜியான் ஆகியோர் தங்கள் வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பரிசுப் பொருட்களைப் பிரித்தபோது, பார்சல் ஒன்றில் ரீசார்ஜ் செய்யக்கூடிய பொம்மை இருப்பதைக் கண்டனர். இதையடுத்து லதேஷ் மற்றும் ஜியான் அந்த பொம்மையை ரீசார்ஜ் செய்ய முயன்றனர். அப்போது திடீரென அந்த பொம்மை வெடித்து சிதறியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
மணமகன் லதேஷின் கைகள், தலை மற்றும் கண்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் அவரது வலது மணிக்கட்டு கூட கையிலிருந்து துண்டிக்கப்பட்டது, அதே நேரத்தில் ஜியானின் தலை மற்றும் கண்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவரும் நவ்சாரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் வன்ஸ்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வெடித்து சிதறிய பரிசானது மணப்பெண்ணின் மூத்த சகோதரியின் முன்னாள் காதலனால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. “அந்த பொம்மையை கோயம்பாவில் வசிக்கும் ராஜு படேல் பரிசாக அளித்ததை அறிந்தனர். மணமகளின் மூத்த சகோதரியுடன் அவருக்கு தொடர்பு இருந்தது, அவர்கள் உறவுமுறையில் வாழ்ந்து வந்தனர், ஆனால் அவர்கள் சிறிது காலத்திற்கு முன்பு பிரிந்தனர்.” என்று மணமகனின் பெற்றோர் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM