திருவண்ணாமலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வேங்கைக்கால் பகுதியில் 1992-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருவண்ணாமலைக்கு பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துபோகும் இடத்தில், கிரிவலப் பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலையை நிறுவுவதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு, அவசர அவசரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் பொக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், அந்த இடம் கால்வாய் அமைந்துள்ள பகுதி. அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும். எனவே இந்த வழக்கு முடியும் வரை தற்போதுள்ள நிலையே தொடர உத்தரவிட வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிள், “சிலை வைப்பதாக கூறப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM