வீடு வீடாக மக்களிடம் குறைகேட்டுச்சென்ற ஆந்திர அமைச்சர் ரோஜாவிடம் , 60 வயதான முதியவர் ஒருவர் தன்னை கவனித்துக்குள்ள யாரும் இல்லை என்று ஏக்கத்துடன் கோரிக்கை வைக்க அவரை ரோஜா கலாய்த்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆந்திராவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள வசதியாக ஒவ்வொரு எம்.எல்.ஏவும் தனது தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்காக வாசலுக்கு வாசல் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சரும் , நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.வுமான நடிகை ரோஜா, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார். ரோஜாவை சந்திக்க மக்களும், அதீத ஆர்வம் காட்டினர்
அப்போது ஒரு முதியவரிடம் முதியோர் பென்சன் முறையாக வருகின்றதா ? என்று ரோஜா கேட்டார். அதற்கு அந்த முதியவரோ , தனக்கு பென்சன் முறையாக வருகின்றது. ஆனால் உடன் இருந்து கவனித்துக் கொள்ளத்தான் ஒருவரும் இல்லை என்று ஏக்கத்துடன் பதில் அளித்தார்
உடனே ரோஜா அரசால் முதியோர் பென்சன் தான் தர இயலும் திருமணமுமா செய்து வைக்க முடியும் என்று சிரித்துக் கொண்டே அந்த முதியவரை கலாய்த்ததால் அங்கிருந்தவர்கள் சிரித்தனர்