தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் முழு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018-ல் மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
அப்போது நடைபெற்ற கலவரத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.
இதையும் படிங்க… விழுப்புரம்: ஆவணங்களின்றி பதுக்கப்பட்ட 165 டன் உரம் பறிமுதல்; ஆட்சியர் நேரில் ஆய்வு
2018 ஜூன் 4ம் தேதி விசாரணை ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த ஆண்டு மே 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், முழு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய நிலையில், 6 மாதம் கால அவகாசத்தை அவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது. அந்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த முழு அறிக்கையை அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதலமைச்சரை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து இன்று சமர்பித்துள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM