நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த வெங்கடேஸ்வரா கல்குவாரியில் 14-ம் தேதி நள்ளிரவில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது 350 அடி ஆழம் கொண்ட கல்குவாரி உள்ளே வேலை செய்துகொண்டிருந்த முருகன், விஜயன், செல்வன், மற்றொரு முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய 6 பேர் பாறை சரிவில் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்புத்துறை மற்றும் போலீஸாரின் முயற்சியால் முருகன், விஜயன் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து கற்கள் சரிந்ததால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனால் கற்களுக்குள் சிக்கிக் கிடந்த செல்வன், 15 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து பாறைகள் சரிந்ததால் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக முருகன் என்ற மற்றொரு நபர் பிணமாக மீட்கப்பட்டார். பாறைக்குள் புதைந்துள்ள ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய இருவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
இந்த நிலையில், குவாரியில் கற்குவியல்களுக்குள் ஒருவரது உடல் அடையாளம் காணப்பட்ட போதிலும் , பெரிய பாறைகளை உடைக்க தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். பாறைகள் கடினமாக இருந்ததால் அவற்றை 10 ஜெலாட்டின் குச்சிகளை வைத்து உடைக்க முடிவு செய்யப்பட்டது. அதிக வெடிமருந்து வைத்தால் சுற்றிலும் உள்ள பாறைகளில் அதிர்வு ஏற்பட்டு மீண்டும் பாறைகள் சரிந்துவிடும் என்பதால் குறைவான வெடிமருந்துடன் வெடிக்க வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் குவாரியின் உரிமையாளரான சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார் ஆகியோரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கல்குவாரி விபத்து தொடர்பான வழக்கை விசாரிக்கும் நாங்குநேரி ஏ.எஸ்.பி-யான ராஜா சதுர்வேதி அமைத்துள்ள தனிப்படையினர் இருவரையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அத்துடன், இருவரின் வங்கிக் கணக்குகளையும் போலீஸார் முடக்கியுள்ளனர். விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, குவாரி விபத்தில் சிக்கி புதைந்து கிடந்த 5-வது நபரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 30 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் வெளியே கொண்டு வந்தனர். உயிரற்ற அந்த உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காணும் பணி நடந்த பின்னரே யாருடைய உடல் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.