பாட்னா:
பீகார் மாநிலம் சசாராம் பகுதியில் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதியாக செயல்பட்டு வருபர் மகேந்திரநாத் நாத். இவர் சசாராம் பகுதியில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நீதிபதி மகேந்திரநாத் வீட்டிற்கு நேற்று காலை 10 மணியளவில் 3 பேர் வந்துள்ளனர். அந்த சமயத்தில் வீட்டில் நீதிபதி மகேந்திரநாத்தின் மனைவி குமாரி மற்றும் மகள் மட்டுமே இருந்துள்ளனர்.
தனது கணவன் மகேந்திரநாத் வீட்டில் இல்லை என குமாரி கூறியுள்ளார். இதையடுத்து, அந்த 3 பேரும் குடிக்க தண்ணீர் தரும்படி குமாரியிடம் கேட்டுள்ளனர். இதனால், சமையல் அறைக்கு சென்று தண்ணீர் கொண்டுவர குமாரி சென்றுள்ளார். அப்போது, அவர் பின்னால் சென்ற அந்த 3 பேரும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி குமாரியை மிரட்டியுள்ளனர். இதனால், செய்வதறியாது திகைத்த குமாரி கத்த முயற்சித்துள்ளார்.
ஆனால், அந்த கும்பல் குமாரியை கடுமையாக தாக்கியுள்ளது. மேலும், குமாரியின் மகளையும் அந்த கும்பல் தாக்கியது. பின்னர், குமாரி அணிந்திருந்த நகைகளை அந்த கும்பல் பறித்துக்கொண்டது. தொடர்ந்து நீதிபதி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தையும் அந்த கொள்ளை கும்பல் திருடி சென்றது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் நீதிபதி மகேந்திரநாத் வீட்டில் கொள்ளையடித்து சென்ற கொள்ளை கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதி வீட்டில் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.