அந்த இரவில் என் பயணத்திட்டத்தை மாற்றியமைத்தவன் சௌரவ்தான். அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 15-ம் தேதி திமாபூரிலிருந்து கவுஹாத்திக்கு ரயில் முன்பதிவு செய்திருந்தேன். கவுஹாத்தி சென்று மேகாலயா செல்வதுதான் திட்டம். அஸ்ஸாம் மாணவிகளில் ஒருத்தி குளிர்காய்ந்தபடியே அடுத்து உங்கள் பயணத்திட்டம் என்ன என்று கேட்டபோது நான் ஷில்லாங் சென்று சிரபுஞ்சி செல்லும் திட்டத்தைச் சொன்னேன். மேகாலயாவுக்கு மூன்று நாள்கள் ஒதுக்கியிருக்கிறேன் என்று சொன்னதும் அது பயனற்றது என்றான் சௌரவ். மேகாலயாவின் பூரண அழகு வெளிப்படுவது மழைக்காலத்தில்தான் என்பதால், இப்போது அங்கு செல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்று சொன்னான். தனிப் பயணிகளைப் பொறுத்தவரை சூழலுக்கேற்ப திட்டத்தை மாற்றிக்கொள்வது வாடிக்கை யானதுதான். மேகாலயாவுக்கு ஒரு நாளே போதும் என்று சொன்னதோடு உலகின் மிகப்பெரிய நதியால் சூழப்பட்டிருக்கும் தீவான மஜ்ஜுலிக்கு செல்லுங்கள் என்று சொன்னான். நான் அதுவரையில் மஜ்ஜுலியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை. பிரம்மபுத்திரா நதியால் சூழப்பட்டிருக்கும் அத்தீவு தற்போது அஸ்ஸாமின் ஒரு மாவட்டமாக இருக்கிறது. கவுஹாத்தி சென்று அங்கிருந்து காஸிரங்கா, மஜ்ஜுலிக்குச் செல்வது நல்ல பயண அனுபவமாக இருக்கும் என்று சொன்னான்.
நதியால் சூழப்பட்டிருக்கும் தீவு என்றதுமே அங்கு செல்லும் உந்துதல் பிறந்தது. பயணிகள் படகில் பிரம்மபுத்திரா நதியில் பயணம் செய்துதான் மஜ்ஜுலியை அடைய முடியும் என்று சௌரவ் சொன்னதையடுத்து, மேகாலயா திட்டத்தை ஒத்திப்போட்டு மஜ்ஜுலிக்கு செல்லும் திட்டத்தை வகுத்தேன். அப்போது கென்னி வந்து, சாப்பாடு தயாராகிவிட்டதாகச் சொன்னதையடுத்து எல்லோரும் சமையலறைக்குச் சென்றோம். பொதுவாக உணவகங்களைப்போல அளவாக சாப்பாடு, கறி எல்லாம் எடுத்து வைக்கவில்லை. சாப்பாடு, பன்றிக்கறி வறுவல், தால் என எல்லாம் வைக்கப்பட்டிருந்தன. அவரவர் தட்டை எடுத்துக்கொண்டு வேண்டிய அளவு போட்டுக்கொள்ள வேண்டியதுதான். வேண்டிய அளவு போட்டுக்கொள்ளலாம் என்றாலும் அடுத்து வருகிறவர்களுக்கு மீதம் வைக்க வேண்டிய பொறுப்புடன் நான்கு பன்றிக்கறித்துண்டுகளை எடுத்துப்போட்டுக் கொண்டு சாப்பிட்டேன். பன்றிக்கறியைப் பொறுத்தவரை அதன் தோல் பகுதிதான் சுவையானது என்பதோடு சற்று கடினமானதும். நெருப்பின் வெம்மையில் நன்கு இறுகியிருந்த கறியின் தோல்பகுதி இன்னும் கடினமாக இருந்தது. அதைக் கடித்துச் சாப்பிடுவது சற்று சவாலானதாகவே இருந்தது.
சாப்பிட்டு முடித்துவிட்டு கொஞ்ச நேரம் மீண்டும் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துகொண்டிருந்தோம். அஸ்ஸாம் மாணவர்களோடு ரஞ்சன் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து வந்திருந்த இரு இளைஞர்கள் என எல்லோரும் அந்த நெருப்பின் முன் கலந்திருந்தோம். ஜார்க்கண்ட் இளைஞர்களில் ஒருவன் அம்மாணவிகளிடம் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்டான். அவனுக்கு சரளமாக ஆங்கிலம் கை வரப்பெற்றிருந்தது. ஒரு பெண்ணின் அண்மை எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாதபடியாக ஒரு பேரனுபவத்தில் திளைத்திருந்தேன். எனக்கு வேண்டப்பட்டதெல்லாம் அமைதி மட்டுமாக இருந்தது. நிலவொளியில் அமைதியின் பேருருவாய்த் தெரிந்த அப்பள்ளத்தாக்குச் செல்ல வேண்டும் என்கிற உந்துதல் எழுந்துகொண்டே இருந்தது. அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை நான் அறிந்திருந்தும் அச்சூழல் எனக்குள் அப்படியோர் எண்ணத்தைத் தோற்றுவித்திருந்தது.
சற்று நேரத்திலெல்லாம் இரவு வணக்கம் சொல்லிவிட்டு அம்மாணவர்களும் ரஞ்சனும் தங்களது டென்டுக்குச் சென்றனர். ஜார்க்கண்ட் இளைஞர்கள் அங்கிருந்த காட்டேஜுக்குச் சென்றனர். டார்மெட்ரியிலிருந்து பாடல்களும், பேச்சொலிகளும் சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தன. நான் மீண்டும் காட்சிமுனைக்குச் சென்று அப்பள்ளத்தாக்கைப் பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தேன். குளிர் உடலைக் குறுக வைத்திருந்தது. எனக்கு வேண்டப்பட்ட அமைதி கிடைத்தது. எவ்வித சிந்தனைக்குள்ளும் ஆட்படாமல் வெறுமனே இருப்பது சில தருணங்களில் அதி உன்னதமாக இருக்கும். அப்படியொரு தருணமாக அது அமைந்திருந்தது.
அந்த நிறைவோடு தூங்கச் சென்றேன். மணிப்பூரிகள் எழுப்பிக்கொண்டிருந்த இரைச்சல் என்னைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்தது. கொஞ்ச நேரத்தில் அது அடங்கிவிட அப்படியே தூங்கினேன். கடுங்குளிரின் தாக்கத்தால் உடல் உதறல் எடுக்க ஆரம்பித்து. அதன் விளைவாகத் தூக்கம் கலைந்து எழுந்தேன். மொபைலில் ஒளிரச் செய்து பார்த்தபோது மணி நள்ளிரவு 2-ஐ கடந்திருந்தது. மணிப்பூரிகள் எல்லோரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். அந்த ஒற்றைப் போர்வையை எப்படிப் போர்த்தினாலும் குளிரின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. குளிர் என்னை நொறுக்கி மென்று கொண்டிருந்தது. அக்கூடாரத்தில் மெலிதாகப் பரவியிருந்த நிலவின் வெளிச்சத்தில் பார்த்தபோது காலருகே சுருட்டி வைக்கப்பட்ட போர்வை போல் ஒன்று கிடந்தது. அதை எடுக்கலாம் எனத் தொட்டபோதுதான் அது நாய் என்று தெரிந்தது. கைகளும் கால்களும் விரைக்க ஆரம்பித்தன. அதன் காரணமாக வலியெடுத்தது. துளிகூட குளிர் உட்புகாத படி சவத்தைப் போல் போர்வையால் என்னை சுற்றிக்கொண்டு படுத்தும் எந்தப் பயனும் இல்லை. ஒன்று போதுமா என்று கென்னி அழுத்தமாகக் கேட்டதற்கான காரணம் அப்போதுதான் விளங்கியது. “இரண்டு போர்வைகள் எடுத்துக்கொள்ளச் சொல்லி கென்னி என் காலில் விழுந்து கதறினானே கேட்டேனா” என வடிவேலு நகைச்சுவையை அச்சூழலுக்குப் பொருத்திப் பார்த்தபோது சிரிப்பு வந்தது. என் காலருகே படுத்திருந்த நாயின் பெயர் ‘ஃப்ரைடே’. எஸ்கிமோக்களைப் போல் ஏன் நாமும் நாயைக் கட்டிப்பித்துத் தூங்கக்கூடாது? காதலர் தினம் அதுவுமாக ஒரு நாயைக் கட்டிப்பிடித் தூங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோமே? என்றெல்லாம் பல யோசனைகள் ஓடின.
இந்த நள்ளிரவில் கென்னியை எழுப்பி போர்வை வாங்குவது சரியாகப்படவில்லை. அது மட்டுமன்றி நேற்றிரவு கென்னி கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே குடித்து நல்ல போதையில் இருந்தார். அவரை எழுப்புவதே சாத்தியமற்றது என்று விளங்கியதும் அம்முயற்சியைக் கைவிட்டேன். புரண்டு கொண்டே இருந்தேன். அக்குளிர் எதற்கும் கட்டுப்படவில்லை. என் முன் இரண்டு தேர்வுகள் இருந்தன. முதலாவது அக்குளிரில் நடுங்கியபடியே விழித்துக் கிடப்பது. இரண்டாவது அக்குளிரைப் பொருட்படுத்தாது நடுங்கிக்கொண்டே தூங்க முயற்சி செய்வது. நான் தூங்க முயற்சி செய்தும் தூக்கம் வரவேயில்லை. என்னவாயினும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற தன்முனைப்புதான் என்னை இந்த ஜூகு பள்ளத்தாக்கு வரை அழைத்து வந்திருந்தது. என்னவாயினும் இந்த இரவைக் கடந்து விடலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அந்த உறுதியே அந்த இரவைக் கடக்க வைத்தது. 4.30 மணிக்கெல்லாம் எழுந்து டார்மெட்ரியை விட்டு வெளியே வந்தேன். டார்மெட்ரியை சுற்றி வட்டமடித்தபடி நடந்தேன். உடலின் இயக்கம் இயல்பாக உருவாக்குகிற வெப்பத்தைக் கொண்டு அக்குளிரை எதிர்கொள்ளும் முயற்சியாக அதைச் செய்து வெற்றியும் கண்டேன். பள்ளத்தாக்குக்கு எதிரே இருந்த மலைப்பகுதியில் இருந்து சூரியன் எழுந்து வருவதைப் பார்த்ததும் கைகூப்பி வணங்கினேன்.
– திரிவோம்!