பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நாளை அறப்போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில், அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன். மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம்தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்ததாகவும்,  அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
அத்துடன், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
“காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியின் முக்கியமான இடங்களில் நின்று, வெள்ளை துணியை வாயில் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவோம். தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்யவேண்டும் என்றால் அது முறையாகாது” என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.