ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிய பேரறிவாளனை அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். மகனுக்காக பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் பல வருடங்களாகப் பேராடினார். அவர் தட்டாத கதவுகள் இல்லை. சந்திக்காத தலைவர்கள் இல்லை. ஒரு தோள்பையோடு ஊர் ஊராக சுற்றியலைந்து மகனின் விடுதலைக்கு ஆதரவு திரட்டிய அந்தத் தாய்க்கு இப்போது நிம்மதி வாய்த்திருக்கிறது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இன்னும் சிறையில் இருக்கிறார்கள்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நளினியின் அம்மா பத்மா, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், “பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் தன் மகனுக்காக நடத்திய போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது. சிறிதும் சோர்ந்து போகாமல் அந்த அம்மா நடந்த நடை கொஞ்சமல்ல. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது, எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்த வழக்கால் எங்கள் குடும்பம் நிலைகுலைந்து விட்டது. வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது. குடியிருக்க வீடு கூட கிடைக்கவில்லை. வேறு ஆதரவே இல்லாமல் தவித்து நின்றோம். அதனால் என் மகளுக்காகவும் மாப்பிள்ளைக்காகவும் அற்புதம் அம்மாளைப்போல என்னால் போராட முடியவில்லை. பேரறிவு விடுதலை செய்யப்பட்டுள்ளதால் என் மகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவாள். எப்படியும் நளினியை அவள் மகளோடு சேர்த்து வைத்துவிடுவார்கள் என்ற நம்புகிறேன்” என்று நளினியின் அம்மா பத்மா தெரிவித்துள்ளார்.