சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதை நாதுராம் கோட்சே சகோதரர் கோபல் கோட்சேவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு எம்.பி. மாணிக்கம் தாகூர் டிவிட் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளதுடன், கவர்னரின் அதிகாரம் என்ன என்பதையும் விளக்கி உள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
எழுவர் விடுதலை விவகாரத்தில் மத்திய காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் ஒரே நிலைப்பாடுதான் இருந்து வருகிறது. நாட்டின் உயர்ந்த தலைவர் ஒருவர் கொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்வது, நாட்டின் மீதான நம்பகத்தன்மயை பாதிக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், உச்சநீதி மன்றம் அரசியல் சாசனப்படியும், மாநில அரசின் அதிகாரத்தின்படியும், பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளன. மாநில பாஜகவும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேரறிவாளன் விடுதலை குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ’’குற்றவாளிகள் கொலைகாரர்கள். அவர்கள் நிரபராதிகள் அல்ல.. உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் இன்று விடுதலை’’ என குறிப்பிட்டு ’’அன்று கோபால் கோட்சே இன்று பேரறிவாளன்’’ என தெரிவித்துள்ளார்.