உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றிதான் பேரறிவாளன் விடுதலை. ஜெயலலிதா போராட்டத்தை முன்னெடுத்ததன் நிறைவாக பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அ.தி.மு.க ஆட்சியின்போது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அடித்தளம்.
இந்தத் தீர்ப்பு முழுக்க முழுக்க அ.தி.மு.க-வுக்கு கிடைத்த வெற்றிதான் என்பதை இந்த நேரத்தில் கூற கடமைப்பட்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள ஆறு பேரை உடனடியாக விடுதலை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.