முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். விடுதலையடைந்த பேரறிவாளன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், தனது விடுதலைக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும், “வரலாற்றில் இடம்பெற வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், மாநில உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகள் 7 பேரையும் உச்ச நீதிமன்றம்தான் கொலையாளி எனக் கூறி தண்டனை கொடுத்தது. ஆனால், தற்போது அதே நீதிமன்றம் சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
மேலும், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும். அந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதிகளில் முக்கியமான இடங்களில் நின்று வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான பதாகைகளைக் கையில் பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்ய வேண்டும் என்றால் அது சரியான முறையல்ல” எனத் தெரிவித்துள்ளார்.