சென்னை: போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுஉயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டம் பூலாம்பாடி காலனி கிராமத்தில் வசித்து வரும் கார்த்திக் தனது 5 வயது மகள் லட்சிதாவை அங்குள்ள தனியார்கிளினிக்குக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு லட்சிதாவுக்கு ஒரு மருத்துவர் சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் சிறுமி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஒரு போலி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது.
ஏழை, எளிய மக்கள் இலவச சிகிச்சை பெறும் நோக்கில், முதல்கட்டமாக 1,900 அம்மா மினி கிளினிக்குகளை அதிமுக அரசு தொடங்கியது. இதனால் லட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்த அரசு அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு மூடு விழா நடத்தியது. இதனால், ஏழை மக்கள் மீண்டும் தனியார் மருத்துவர்களை அணுகும் நிலை உள்ளது.
இல்லம் தேடி மருத்துவம் என இந்த அரசு அறிமுகப்படுத்திய திட்டம்சரியாக செயல்பட்டிருந்தால் குழந்தை லட்சிதா உயிருடன் இருந்திருப்பார். திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்பதை புரிந்து கொண்ட அரசு, அம்மா மினி கிளினிக்திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து, 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் நிறைய மருத்துவமனைகள் உள்ளன. கிராமத்தில் இருப்பவர்கள்தான் சிறு உபாதைகளுக்கு கூடநகரத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, அம்மா மினி கிளினிக்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். உயிரிழந்த சிறுமி லட்சிதாவின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.