மகன் இறந்தது தெரியாமல் மாயமானதாக போலீசில் புகார் அளித்த தந்தை

பெங்களூரு:

பெங்களூரு வித்யரண்யபுராவில் வசித்து வருபவர் சதீஷ். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 15). இவன் அந்தப்பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சந்தோஷ் மோட்டார் சைக்கிளில் சககாரநகருக்கு சென்றுவிட்டு வித்யரண்யபுரா நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது வித்யரண்யபுரா ஜி.கே.வி.கே. சாலையில் வந்தபோது சந்தோசின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

சந்தோசை பற்றி வித்யரண்யபுரா போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் மகன் இறந்தது பற்றி தெரியாமல் சதீஷ், தனது மகன் சந்தோஷ் மாயமாகிவிட்டதாவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் வித்யரண்யபுரா போலீசில் புகார் அளித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் நிலைய வளாகத்தில் சதீஷ் தனது மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்தார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் கேட்டபோது ஒரு சிறுவன் இந்த மோட்டார் சைக்கிளில் வந்தபோது விபத்தில் சிக்கி இறந்ததாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ் ஆஸ்பத்திரிக்கு சென்று பிணவறையில் பார்த்தபோது சந்தோஷ் இறந்தது தெரியவந்தது.

தனது மகன் உடலை பார்த்து சதீஷ் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தலையில் பலத்த காயம் அடைந்து சந்தோஷ் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. இந்த விபத்து குறித்து வித்யரண்யபுரா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.