லக்னோ: “வறுமை, வேலையின்மை, பணவீக்கம் முதலான முக்கியப் பிரச்சினைகளை மறைப்பதற்காக, மக்களை மதத்தை நோக்கி பாஜக திசைத் திருப்புகிறது” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, “அதிகரித்து வரும் வறுமை, வேலையின்மை, வீண்ணை முட்டும் பணவீக்கம் முதலான முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைத் திருப்புவதற்காக மதவழிபாட்டு தலங்களை பாஜக குறிவைக்கிறது.
சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் ஞானவாபி, மதுரா, தாஜ்மஹால் போன்றவற்றின் மூலம் மக்களின் மத உணர்வுகளை பாஜக தூண்டுகிறது. இது நாட்டைப் பலப்படுத்தாது; மாறாக வலுவிழக்கச் செய்யும். பாஜகவின் இந்தப் போக்கு எப்போது வேண்டுமானாலும் நாட்டின் நிலைமையை கெடுக்கலாம். இதை பாஜக கவனிக்க வேண்டும்.
குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடைய இடங்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக பாஜகவால் மாற்றப்பட்டு வருகின்றன. இவை நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தாது; மாறாக நாட்டில் பரஸ்பர வெறுப்பையே உருவாக்கும்.
பாஜகவின் செயல்கள் கவலையளிப்பதாக உள்ளது. நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜகவின் இந்தச் செயலால் நாட்டுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது” என்றார்.
முன்னதாக, முகலாய மன்னர்கள் இந்து வழிபாட்டு இடங்களை அபகரித்துதான் மசூதிகள், நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளதாக இந்துத்துவ அமைப்பினர், பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இதனால் கியான்வாபி, மதுரா ஷாயி ஈத்கா, குதுப் மினார் மற்றும் தாஜ்மகால், ஜாமா மசூதி போன்றவை சமீப நாட்களாக பாஜகவினரால் அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குகளை அவர்கள் நீதிமன்றங்களில் தொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.