மத்தியிலும்,மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்த போது பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யவில்லை- பாஜக கேள்வி

சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை  ஏற்றுக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், அதை கண்ணும் கருத்துமாக பேணி பாதுகாக்கும் நீதிமன்றங்கள் மீதும் பாஜக மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், இந்திய ஜனநாயகத்திற்கும், நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள்தான் மிகப் பெரிய நம்பிக்கையையும், 
உறுதிப்பாட்டையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாநில அரசின் உரிமைகளிலோ, ஆளுனரின் அதிகாரங்களிலோ, தமிழக அரசைத் தவிர, நீதிமன்றங்களுக்கும் அல்லது மத்திய அரசுக்கும் எந்த குழப்பமும் இல்லை.
நீதிமன்றத் தீர்ப்பில், மத்திய அரசுக்கோ, ஆளுனருக்கோ எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. 
மரணங்களில் அரசியல் செய்யும் மாநிலக்கட்சிகள் இதையும் அரசியலாக்க முயற்சிப்பதில் வியப்பில்லை. ஆனால் அதில் துளி கூட உண்மையில்லை என்பது மக்களுக்கு தெரியும்.
மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்த போது கருணாநிதி, பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யவில்லை?
கருணாநிதிக்கு பேரறிவாளன் விடுதலையில் உடன்பாடு இல்லையா? அல்லது  கலைஞரைவிட அரசியல் வித்தகம் மிக்கவர் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா?
பேரறிவாளனை உச்சநீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் 142ன்படி, தன் உச்சபட்ச சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. திமுகவை பொருத்தவரை காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.