புதுடெல்லி: மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மழைக்காலத்தில் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஹரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறை இன்னும் முடிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக கடிதத்தில் வருத்தமும் அவர் தெரிவித்துளளார்.
முன்னதாக மத்திய மின்துறை அமைச்சகம், மாநில மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி தேவையில் 10 சதவீதத்தை கலப்படத்துக்காக இறக்குமதி செய்யும்படி அறிவுறுத்தியிருந்தது.
மே மாதம் 31-ம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்கும்படியும் அறிவித்திருந்தது. மாநில மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்சிஆர் முறையில் வழங்கப்படும் நிலக்கரி அளவை விரைவில் உயர்த்தலாம் என மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கேட்டுக் கொண்டதுடன், மின்சாரத்தின் தேவை, நுகர்வு அதிகரிப்பு காரணமாக, மின்னுற்பத்தி நிறுவனங்களின் நிலக்கரி நுகர்வு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன், குறைந்தபட்ச நிலக்கரி கையிருப்பை இறுதி செய்வதற்காக மாநில மின்னுற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஐபிபி நிறுவனங்களுக்கு சொந்தமான அனல்மின் நிலையங்கள் போதுமான நிலக்கரி இருப்பை பராமரிப்பதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் பயன்டுத்த வேண்டும் என மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உத்தரவிட்டுள்ளார்.