முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்! என்று தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்டாலினை சந்தித்த பிறகு பேரறிவாளன் பேட்டி அளித்தார்.
இன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், அவரின் தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினருடன் சென்னை விமான நிலையத்தில் முதல்வரை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தனர்.
இதையடுத்து முதல்வர் உடனான சந்திப்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன் கூறுகையில் “முதல்வருக்கு நாங்கள் நன்றி சொல்வதற்காக இங்கு வந்துள்ளோம். முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தது மிகவும் மனநிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநில அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்துள்ளார். அதனால்தான் தற்போது இந்த முடிவு கிடைத்துள்ளது. முதல்வர் தங்களிடம் குடும்ப பின்னணி குறித்து கேட்டறிந்தார்.
எதிர்கால வாழ்க்கை குறித்து தற்போது எதுவும் பேசவில்லை. அதற்கான நேரம் இது இல்லை. மற்றவர்கள் விடுதலை குறித்து அவர்கள் தீர்ப்பை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் தற்போது வெளியே வந்து உள்ளேன். இப்போதுதான் சுதந்திரமாக வெளிக் காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ளேன். சுவாசித்துக்கொள்கிறேன். அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து அதன்பின் முடிவெடுப்பேன்.” என்று கூறினார்.
இதையடுத்து அவரின் தாய் அற்புதம்மாள் கூறுகையில் “பேரறிவாளன் பரோலில் வெளியே வந்ததால் அவருக்கு மருத்துவ உதவிகள் சரியாக கிடைத்தது. நான் இதற்கு முன் முதல்வரை சந்தித்து பேரறிவாளன் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டார். இனி அவர் சிறைக்குச் செல்லாமல் இருக்க நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதற்கு முதல்வர் உங்களுக்கு உள்ள உணர்வுதான் எனக்கும் உள்ளது என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை நான் செய்கிறேன் என உறுதியளித்தார். இன்று விடுதலை ஆகிய உடனே அவரை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தோம் எங்களை மகிழ்ச்சியாக வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM