வேலூர்: பேரறிவாளனைத் தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வரும் 23-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 2 பேரும் சென்னை புழல் சிறையிலும், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில் தண்டனை பெற்றிருந்த திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் இன்று காலை உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் சிறையில் உள்ள மற்ற 6 பேரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது: ”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இதில் தற்போது பேரறிவாளன் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒருவரை மட்டுமே விடுதலை செய்திருப்பது சரியானது அல்ல. பணம் இருப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால், பணம் இல்லாதவர்கள் வழக்கு தொடராமல் இருந்தால் அவர்களுக்கு நீதி கிடைக்காதா என்ன?
இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். அனைவரும் ஒரே வழக்கின் கீழ் உள்ளவர்கள் தானே? அப்படியிருக்க இதில் ஒருவருக்கு மட்டும், விடுதலை செய்து தீர்ப்பு அளித்துவிட்டு, மற்ற 6 பேர் மீது பாராமுகமாக இருக்கக்கூடாது. இது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர பணம் இல்லாதவர்களுக்கு நீதி கிடைக்காது என்பது போல் உள்ளது. இது தொடர்பாக வரும் திங்கட்கிழமை (23-ம் தேதி) சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம்” என்று அவர் கூறினார்.