வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடந்த குங்பூ போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற, மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை அங்கோம்பினா தேவி என்பவர், வறுமை காரணமாக மீன் விற்பனை செய்து வருகிறார்.
மணிப்பூர் மாநிலம் நிங்தோகோங்க் பகுதியை சேர்ந்தவர் அங்கோம் பினா தேவி(36). 3 குழந்தைகளுக்கு தாயான இவர், கடந்த 2019ம் ஆண்டு கணவர் மறைவிற்கு பிறகு , அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கும் வறுமை காரணமாக, அவர்களுடன் சேர்ந்து மீன் விற்க துவங்கினார். இருப்பினும், குங்பூ மீது கொண்ட ஆர்வம் காரணமாக, பயற்சி பெற்று, சர்வதேச மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார்.
போட்டிகளில் பங்கேற்பதற்கு அரசிடம் இருந்து எந்தவிதமான உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை. ஒரு போட்டியில் பங்கேற்க 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்திருந்தாலும், போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற பிறகும் எந்தவிதமான ஊக்கத்தொகையும் கிடைக்கவில்லை. தற்போது வறுமை காரணமாக மீன் விற்று வருகிறார்.
இது தொடர்பாக அங்கோம் பினா தேவி கூறியதாவது: கடந்த 2018 ம் ஆண்டு, நேபாளத்தில் தெற்கு ஆசியா குங்பூ அமைப்பு சார்பில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்றேன். இதுவரை தேசிய அளவில் 7 மற்றும் மாநில அளவில் 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளேன். 5 வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளேன். பல தங்க பதக்கங்களை பெற்ற பிறகும், வழக்கமான உணவை தவிர வேறு எந்த சத்தான உணவையும் எடுத்து கொள்வது இல்லை. போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளது. ஆனால், வறுமை காரணமாக மீன் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளின் படிப்புக்கும் செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால், போட்டியாளர்கள் காரணமாக, போதிய அளவு வருமானம் கிடைப்பது இல்லை. அரசு உதவி செய்தால், போட்டிகளில் பங்கேற்க உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement