தமிழ்நாடு அரசின் சட்டப்படி (Tamilnadu Regulations Of Rights And Responsibility Of LandLords And Tenants Act(2017) ) வாடகை வீட்டில் குடியிருப்பவர் கொடுக்கும் வாடகை பணத்திற்கு வீட்டின் உரிமையாளர் கண்டிப்பாக ரசீது கொடுக்க வேண்டும்.
அப்படி ரசீது கொடுக்காவிட்டால் குடியிருப்பவர் ஆன்லைன் மூலமாக வாடகை பணத்தை கொடுக்கலாம். அல்லது இரண்டு மாதத்திற்கு மணியார்டர் மூலமாக வாடகை அனுப்பலாம். அப்படியும் வீட்டின் உரிமையாளர் வாடகை ரசீது கொடுக்கவில்லை என்றால் வாடகை அதிகாரியிடம் சென்று குடியிருப்பவர் புகார் செய்யலாம்.
வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு குடியிருப்பவரின் வீட்டிற்குள் ஏதாவது ஒரு காரணத்திற்காக செல்ல வேண்டுமென்றால் 24 மணி நேரத்துக்கு முன்பாக குடியிருப்பவருக்கு ஒரு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
அதே போல காலை 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்கு பின்னர் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருப்பவரின் வீட்டிற்குள் செல்ல கூடாது.
வாடகை ஒப்பந்தம் போட்டு தற்போது அந்த ஒப்பந்தம் முடிய போகிறது என்றால், மூன்று மாதங்களுக்கு முன்னரே வீட்டின் உரிமையாளரும், வாடகைக்கு இருப்பவரும் ஒன்றாக அமர்ந்து பேசி அடுத்ததாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.
ஆனால் ஒப்பந்தம் முடிந்தும் அடுத்ததாக எந்த ஒரு ஒப்பந்தமும் போடவில்லை என்றாலும், வாடகைக்கு குடியிருப்பவர் தொடர்ந்து 6 மாதம் அந்த வீட்டில் குடி இருக்கலாம்.
இருப்பினும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று சொன்னால் குடியிருப்பவர் கட்டாயம் காலி செய்தே ஆக வேண்டும்.
அதேபோல வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர் துரதிர்ஷ்டவசமாக இறந்து போகும் சமயத்தில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஒப்பந்தம் முடியும் வரை அந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம்.
ஒப்பந்தம் முடிந்த பிறகுதான் ஒருவரை வீட்டிலிருந்து காலி பண்ண சொல்ல முடியும். அப்படி ஒப்பந்தம் முடிந்த பிறகும் குடியிருப்பவர் வீட்டைவிட்டு காலி பண்ணவில்லையென்றால் வாடகை நீதிமன்றத்தில் சென்று புகார் செய்யலாம்.
நீதிமன்றம் சொல்லியும் குடியிருப்பவர் வீட்டை காலி செய்யவில்லை என்றால், ஒப்பந்தம் முடிந்த தேதியிலிருந்து வீட்டை காலி பண்ணும் தேதி வரைக்கும் இரண்டு மடங்கு வாடகை வீட்டின் உரிமையாளர் அவரிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
இந்த வாடகை சட்டங்கள் எந்த இடத்திற்கெல்லாம் பொருந்தாது? என்றால் அரசு நிலங்கள், கோவில் இடங்கள், நிறுவனத்தின் ஊழியருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட இடங்கள், மாற்றும் ஹோட்டல், லாட்ஜ்க்கு இந்த சட்டம் பொருந்தாது.
இதுதான் வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருப்பவருக்கும் சட்டப்படி உள்ள உரிமைகள். ஆனால் இந்த எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டுமென்றால் வாடகை ஒப்பந்தம் போட்டு ரிஜிஸ்டர் செய்திருந்தால் மட்டுமே இந்த உரிமைகள் எல்லாம் கிடைக்கும்.
எனவே வாடகைக்கு குடி இருப்பவர்களும், வீட்டின் உரிமையாளரும் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்வது பாதுகாப்பானது இல்லையா?