முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையானது, சென்னை, மும்பை, டெல்லி மற்றும் பஞ்சாப் போன்ற நகரங்களில் இவ்விருவரும் தொடர்புடைய 10 இடங்களில் நடைபெற்றது. இது தொடர்பாக ப.சிதம்பரமும், “சி.பி.ஐ அதிகாரிகள் காட்டிய எஃப்.ஐ.ஆர்-ல் நான் குற்றம்சாட்டப்பட்டவனாகக் குறிப்பிடப்படவில்லை” என ட்வீட் செய்திருந்தார்.
ஆனால், பஞ்சாப் மாநிலம் மானசாவிலுள்ள வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற, 200-க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு விசாக்கள் வழங்க சட்டவிரோதமாக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கராமன் முக்கிய நபர் என சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று கூறியிருந்தனர். இந்த நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கராமனை சி.பி.ஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.