சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற உதவிய குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய கூட்டாளியும், அவருடைய ஆடிட்டருமான பாஸ்கர் ராமனை சிபிசிஐடி கைது செய்திருக்கிறது. அவரை டெல்லி அழைத்துச்சென்று விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 260க்கும் அதிகமான சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோத விசாக்கள் வழங்கப்பட்டதாக கூறி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையில் இவ்வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக விசா முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரம் தொடர்புள்ள 10 இடங்களில் சோதனை மேற்கொண்டிருந்தனர். சிபிஐயின் பொருளாதார குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், அரசு வேலையை முறைகேடாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான ஆதாரங்களாக பாஸ்கரன், கார்த்தி சிதம்பரம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை சேர்ந்தவர்களின் ஈமெயில் பரிமாற்றங்களை குறிப்பிட்ட தேதியுடன் சிபிஐ இணைத்துள்ளது.
சீனர்கள் இந்தியா வந்து பணி புரிய முறைகேடாக விசா பெறுவதற்காக 2011 ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் பாஸ்கர ராமன் என்பவர் மூலமாக அணுகியதாகவும் இதற்காக 50 லட்சம் ரூபாய் கையூட்டு பெறப்பட்டதாகவும், சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM