முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பை வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து காரசாரமான வாதங்களை முன்வைத்து வந்தன. அப்போது மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் சரமாரியான கேள்விகளையும் நீதிபதிகளும் எழுப்பியிருந்தனர். ஒருகட்டத்தில், உச்ச நீதிமன்றமே ஏன் அவரை விடுதலை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று பிற்பகல் 10.45 மணியளவில் வாசிக்க தொடங்கினர். 161-வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்ச நீதிமன்றமே அந்த வழக்கில் முடிவெடுக்க dரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவு வழிவகுக்கிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர். ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசமைப்புச் சட்டப்படி தவறு எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM