விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விசாரணை கைதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம்_ திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (36). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவர் கொலை வழக்கில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் விழுப்புரம் அருகே வேடம்பட்டுவில் உள்ள விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வந்தார். இந்நிலையில் சிறைக்கு வந்து சுமார் மூன்று மாதமாகியும் உறவினர்கள் அவரை ஜாமீனில் எடுக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை சிறை கழிப்பறைக்குள் சென்ற முருகன் நீண்டநேரமாக வெளியே வராததால் சிறை போலீசாரும், சக சிறைக் கைதிகளும் உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். கழிவறையின் ஜன்னலில் தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக சிறைத்துறையினர் அவரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்திருக்கின்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் விசாரணைக் கைதி முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை சம்பவம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM