புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் அடைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சுற்றுச்சூழல் மாசு குறித்து ‘தி லான்செட் பிளானெட்டரி ஹெல்த்’ என்ற பத்திரிகையில் வெளியிட அறிக்கையில், ‘கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக 23 லட்சம் பேர் அகால மரணம் அடைந்துள்ளனர். அதே சீனாவில் 22 லட்சம் மக்கள் மாசு காரணமாக இறந்தனர். இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசு அளவீடானது, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை காட்டிலும் 93% அதிகமாக உள்ளது. உலகளவில், 2015ம் ஆண்டில் இறந்ததைப் போலவே, 2019ம் ஆண்டிலும் 90 லட்சம் பேர் மாசுபாடு காரணமாக இறந்துள்ளனர். இந்தியாவுடன் ஒப்பிடும்போது நான்கில் ஒருபங்கு ஆகும். உலகளவில் 18 லட்சம் மக்கள் நச்சு ரசாயன மாசுபாட்டால் (ஈயம் உட்பட) பலியாகின்றனர். இது 2000ம் ஆண்டிலிருந்து 66% அதிகரித்துள்ளது. கடுமையான வறுமையுடன் (சுவாமிக்கும் காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாடு போன்றவை) தொடர்புடைய மாசு மூலங்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தொழில்துறை மாசுபாட்டால் (சுற்றுப்புற காற்று மாசுபாடு மற்றும் ரசாயனங்கள் போன்றவை) அதிகரித்து வருகின்றன. நோய் மற்றும் அகால மரணத்திற்கான உலகின் சுற்றுச்சூழல் மாசு முக்கிய காரணியாக உள்ளது, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளை அதிகமாக பாதிக்கிறது. இந்தியா, சீனா, நைஜீரியா, எத்தியோப்பியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளில் மாசு அதிகமாக உள்ளது. இந்தியா, சீனா மற்றும் நைஜீரியாவில் 2000 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் நவீன மாசுபாடுகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் அதிகரித்து வருகின்றன. சீனாவும், இந்தியாவும், மாசுக் குறைப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.