சென்னை: சென்னையில் உள்ள 6 பேருந்து நிறுத்தங்களை கழிவறை வசதியுடன் ரூ.3.96 கோடி செலவில் மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 1,000 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்தி வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்தப் பேருந்து நிறுத்தங்களில் விளம்பரங்களை வைக்க அனுமதி அளித்து வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக 6 பேருந்து நிறுத்தங்களில் இந்தப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சைதாப்பேட்டையில் உள்ள புதிய மற்றும் பழைய பேருந்து நிறுத்தம், வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிறுத்தம், கிண்டி பந்தய சாலை பேருந்து நிறுத்தம், 100 அடி சாலை ஈக்காட்டுதாங்கல் பேருந்து நிறுத்தம், காமராஜர் சாலை அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட ஆறு பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்தப் பேருந்து நிறுவனங்களில் நவீன நிழற்குடைகள், பேருந்து தகவல் பலகைள், விளக்குகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படும். முதல் கட்டமாக இந்தப் பேருந்து நிறுத்தங்களில் இந்த வசதிகள் செய்யப்படும். இது வெற்றி அடைந்தால் மற்ற இடங்களிலும் இதை அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.