கர்தார்பூர் : இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது, குடும்பத்தினரை விட்டுப் பிரிந்த பெண், 75 ஆண்டுகளுக்குப் பின், தன் சகோதரர்களை சந்தித்தார்.
நாடு விடுதலை அடைந்த போது இந்தியா – பாகிஸ்தான் தனித்தனியாக பிரிந்தன. அப்போது பெரும் கலவரம் வெடித்தது. இதில் பலியான சீக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உடல் அருகே குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்த முகமது இக்பால் – ராக்கி தம்பதி, அந்தக் குழந்தையை துாக்கி சென்றனர். அதற்கு மும்தாஜ் பீவி என்று பெயரிட்டு வளர்த்தனர்.
சமீபத்தில் முகமது இக்பால் மரணம் அடையும் தருவாயில், மும்தாஜ் பீவியிடம் அவரது குடும்பம் பற்றிய தகவலை கூறினார். இதையடுத்து, மும்தாஜ் மற்றும் அவரது மகன் ஷாபாஸ் இருவரும் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து, இந்தியாவில் தங்கள் குடும்பத்தினரை தேடினர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சித்ராணா கிராமத்தில் வசிக்கும் தன் சகோதரர்கள் பற்றிய தகவல், மும்தாஜுக்கு கிடைத்தது. இதையடுத்து, பாக்., பகுதியில் சீக்கிய குருவின் புனிததலம் அமைந்துள்ள கர்தார்பூரில், மும்தாஜ் தன் சகோதரர்கள் குருமீத் சிங், நரேந்திர சிங் மற்றும் அம்ரீந்தர் சிங் மற்றும் குடும்பத்தினரை 75 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தார். இந்த சந்திப்பு மனதை நெகிழச் செய்யும் விதமாக இருந்தது.
Advertisement