HARDIK PATEL: மோடி கோட்டையில் காலியாகும் காங்கிரஸ் – அடுத்த விக்கெட் காலி!

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹர்திக் படேல் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், ஆட்சியை பிடிக்க, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் முயற்சி செய்து வருகிறது.

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை, படேல் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது. இந்த சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல் சில ஆண்டுகளுக்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர்களின் முயற்சி காரணமாக, ஹர்திக் படேல், 2019 ஆம் ஆண்டு அக்கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்த ஹர்திக் படேல், சில நாட்களுக்கு முன்னர், சமூக வலைதளங்களில் இருந்து
குஜராத் காங்கிரஸ்
செயல் தலைவர் என்ற தன் சுய விபரத்தை நீக்கினார். இதனால், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறலாம் என தகவல் வெளியாகின.

இந்நிலையில் இன்று, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, ஹர்திக் படேல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலகி உள்ளேன். இதனை சக நிர்வாகிகள் மற்றும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். எதிர்காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹர்திக் படேல் விலகி உள்ளது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.