சாதாரணமாக தினமும் நம் வாழ்வில் கிடைக்கக்கூடிய எளிய பொருளான எலுமிச்சையின் மகத்துவம் மிகவும் அளப்பரியது. சருமத்துக்கும், கேசத்துக்கும், உடலின் பல பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கக் கூடியது எலுமிச்சை.
சருமப் பிரச்னைகளுக்கு எலுமிச்சை மூலம் பெறக்கூடிய தீர்வுகள் பற்றி கூறுகிறார், அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா.
1. எலுமிச்சை சாற்றையும், கண்டிஷனரையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொள்ளவும். இதனை கேசத்தில் வேர் வரை அப்ளை செய்து 30 நிமிடங்களுக்குப் பின் தலையை அலசவும். இதனை வாரம் ஒருமுறை செய்து வர, பொடுகுப் பிரச்னை குறைய ஆரம்பிக்கும்; எலுமிச்சை பழத்தில் anti bacterial benefit இருப்பதனால் மீண்டும் பொடுகு ஏற்படாமல் தடுக்கும்.
2. நகங்களை வெள்ளையாக்க எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம். சிலருக்கு தொடர் நெயில்பாலிஷ் பயன்பாட்டால் நகம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனை நீக்குவதற்கு எலுமிச்சை பழத்தில் சிறிதாக துளையிட்டு, அதனை அப்படியே விரல்களின் மேல் வைத்துவிடலாம். 10 நிமிடங்களுக்குப் பின் அதனை எடுத்துவிட்டு, பின் ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். நகங்களில் இருக்கும் மஞ்சள் கலர் நீங்கி வெள்ளையாவதுடன், நகம் ஆரோக்கியமாக இருக்கும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்வது நல்லது.
3. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி ஆசிட் இருப்பதால், நல்ல ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படும். அதனால் தினமும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, உடலில் கருமையான பகுதிகளான கை முட்டி, அக்குள் பகுதி, கால் முட்டிகளில் அப்ளை செய்து மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்களுக்குப் பின் கழுவிவிடவும். அந்தப் பகுதிகளில் உள்ள கருமை நீங்கும். இதனை தினமும் செய்து வரலாம்.
4. சிலருக்கு சருமத்தில் சின்னச் சின்ன துளைகள் இருக்கும். இதனை சரிசெய்ய, சிறிது எலுமிச்சை சாற்றுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, ஸ்பிரே பாட்டிலில் எடுத்துக்கொள்ளவும். தினமும் காலையில் முகத்தை க்ளென்சிங் (cleansing) செய்து முடித்ததும், டோனர் போல இந்த தண்ணீரை பயன்படுத்தி, பஞ்சை கொண்டு முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளலாம். இதன் மூலம் முகத்தில் இருக்கும் துளைகள் குறையும், முகமும் பளபளப்பாக, மென்மையாக மாறும்.
5. எலுமிச்சை சாறு மற்றும் சோடா உப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் நிறம் சமமற்று (uneven) உள்ள இடங்களில், வாரத்துக்கு இரண்டு முறை தடவி வந்தால், பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
6. வெந்நீரில் எலுமிச்சை சாற்றை சேர்த்து, சிறிதளவு உப்பு மற்றும் தேன் கலந்து, தினமும் வெறும் வயிற்றிலோ, சாப்பிட்டு முடித்த பின்னரோ குடித்து வந்தால் உடலுக்கு மிக நல்லது; உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும். உடல் எடையும் குறைய வாய்ப்புள்ளது.
7. முகத்தில் துளைகள், மாசு பாதிப்புகள் இருக்கிறதா? எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி இரண்டையும் எடுத்துக்கொள்ளவும். தக்காளியில் உள்ள விதைகளை நீக்கிய பின் அதனை அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின் கழுவவும். தக்காளியில் உள்ள டார்ட்டாரிக் அசிட் மற்றும் எலிமிச்சையில் உள்ள விட்டமின் சி ஆசிட் சருமத்தை பலப்படுத்தும். இதனால் முகத்தில் உள்ள துளைகள் மூடப்படும். இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.
8. முகப்பரு உள்ளவர்கள் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து பருக்கள் உள்ள இடத்தில மட்டும் தடவி வரவும். இந்தக் கலவையை அப்ளை செய்யும்போது எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் 5 நிமிடத்திற்குள் கழுவி விடலாம், இல்லையென்றால் 10 நிமிடம் வரை வைத்திருந்து பின்பு கழுவலாம். இதனால் முகப்பரு வேகமாகக் குறைய தொடங்கும்.
9. எலுமிச்சை சாறு சிறிதளவு, இந்துப்பு பொடியாக்கியது சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். கற்பூரவல்லி இலையை காயவைத்துப் பொடிக்கவும். மேற்சொன்ன மூன்றையும் கலந்து, அத்துடன் சிறிது ஆலிவ் எண்ணைய் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து, வட்டவடிவில் மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவிவிடலாம். இந்த ஸ்கிரப்பை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படும், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
10. எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனை முகத்தில் மாஸ்க் போன்று அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின் முகத்தை கழுவலாம். முகம் நல்ல புத்துணர்ச்சியுடன், மென்மையாக இருக்கும்; முகத்தில் இருக்கும் கருமை நீங்குவதுடன் இறந்த செல்களும் வெளியேற்றப்படும்.